கீழடியில் கிடைத்த தங்கம் ஆய்விற்காக அமெரிக்கா செல்ல உள்ளது

கீழடியில் கிடைத்த தங்கம் காலத்தை கண்டறியும் சோதனைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

keezadi

கீழடியில் அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் என்றும் அங்கிருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி தொடர்ந்த இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “ நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்துள்ளன. 7,000க்கும் அதிகமான பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன. முதல் முதலாக தங்க ஆபரணம் ஒன்றும் கீழடியில் கிடைத்துள்ளது ” எனக் கூறப்பட்டிருக்கிறது.

காலத்தை கண்டறியும் சோதனைக்காக இந்த பொருட்களை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐந்தாம் கட்ட பணிகளைத் தொடங்க மத்திய தொல்லியல் துறையின் அனுமதி கோரப்பட்டிருக்கிறது எனவும் தொல்லியல் துறை தாக்கல் செய்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
English Summary
7000 objects including gold found in keezhadi excavation project