மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி நாட்டில் மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது.   இது இந்தியாவிலும் வேகமாக பரவுவதால் இந்த நோய்ப் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோரைத் தீவிரமாக கண்காணிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.   அதையொட்டி அனைத்து மாநிலங்களும் கண்காணிப்பை தீவிரமாக்கி உள்ளன.

நாட்டில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஒமிக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்குக் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.  இதில் தொற்று பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

அவர்களுக்கு ஒமிக்ரான் வகை தொற்று என உறுதியானால் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று நேற்று உறுதியாகி இருந்தது. தற்போது மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான 7 பேரில் 4 பேர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்தவர்கள், எஞ்சிய 3 பேர், வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்று வந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.  தற்போது கர்நாடகா-2, மகாராஷ்டிரா-8, குஜராத், டெல்லியில் தலா ஒருவருக்கு என நாடு முழுவதும் 12 பேருக்குத் தொற்று உறுதி ஆனதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.