டெல்லி: இன்று 69-வது பிறந்த நாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கேரள முதல்வல் பினராயி விஜயன், அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்.பி, நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர்  பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் பெரியார் நினைவிடத்திலும்  மரியாதை செலுத்தினார். அவரை திக தலைவர் வீரமணி வரவேற்றார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, எம்.பி. தயாநிதி மாறன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக அமைச்சர்கள், திமு.க எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், கூட்டணி கட்சியின் தலைவர்கள், தமிழக அரசின் உயர் அதிகாரிகள், திரையுலகினர்  என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தொலைப்பேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு தங்களின் ஒத்துழைப்போடு தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின்  உறுதி அளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்  துரைமுருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘முதல்வராகி மு.க.ஸ்டாலின் ஒருமுறைதான் டெல்லி சென்றார்; அவர் மறுமுறை டெல்லி செல்வதற்கு முன்பே அரசியலில் அகில இந்திய நட்சத்திரமாக ஜொலித்துவிட்டார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல; சரித்திரம் படைக்கப் போகும் ஓர் யுகபுருஷன்’ என்று கூறியுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  ”இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்’என்று தெரிவித்துள்ளார்.

திமுக மகளிரணி தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பெரியார்- அண்ணா – கலைஞர்- உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூக நீதிப் பாதையில், கழகத்தையும் தமிழகத்தையும் வழிநடத்திச்செல்லும் தளபதி – அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  ‘மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க.’ என பதிவிட்டுள்ளார்.

 நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், “இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.