சென்னை: நவம்பர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்ற 4 நாட்கள் வாக்காளர் முகாமில், சுமார் 66 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. புதிதாக பெயர்களை சேர்க்க கோரி மட்டும் 42,707 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும், ஏற்கனவே  வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் பெயர் உள்ளதா என சரி பார்த்துக்கொள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் தங்கள் பெயரை சேர்க்கவும் ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் மாறியவர்கள் திருத்தம், இறந்தவர்கள் மற்றும் 2 இடங்களில் பெயர்கள் உள்ளவர்கள் நீக்கம் செய்யவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அதன்படி நவம்பர்  12, 13-ம் தேதி முதல் கட்டமாகவும்  கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் 2-ம் கட்டமாகவும் வாக்காளர் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், தமிழகம் முழுவதும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றது.

அதுபோல சென்னையில் உள்ள  16 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3723 வாக்குசாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள்  நடத்தப்பட்டன.   கடந்த 2 நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் 43 ஆயிரம் பேர் பெயர் சேர்த்தல், திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். புதியதாக சேர 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.  ஏற்கனவே நடைபெற்ற முதல் கட்ட முகாமில் 23 ஆயிரம் பேர் பங்கேற்று மனுக்கள் கொடுத்தனர்.

சென்னையில் இதுவரை நடத்தப்பட்ட 4 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 66,671 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். புதிதாக பெயர்களை சேர்க்க கோரி மட்டும் 42,707 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர் என சென்னை மாநகர தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.