0
 
போதிய மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால்   இந்தாண்டு 50 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கான அனுமதி கோரி  விண்ணப்பங்கள்  வந்துள்ளதாக  அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் பேரா. அனில் டி.சஹாஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
வேலையின்மை, கல்விக் கடன் கிடைப்பதில் சிக்கல் ஆகிய காரணங்களால் பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே நாளுக்குநாள்  குறைந்து வருகிறது. பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் காலி இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை நடத்துவதற்கு அக்கல்லூரி நிர்வாகிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால், நாட்டில் உள்ள 50 பொறியியல் கல்லூரிகள் நடப்பாண்டு மூடுவதற்கான் அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளது.
2013-14 ஆம் கல்வி ஆண்டில் 17 பொறியியல் கல்லூரிகளும், 2014-15 ஆம் கல்வி ஆண்டில் 18 பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்ட்தாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் புள்ளிவிவரம் கூறுகிறது.
“நாட்டில் நல்ல தரமான தொழில்நுட்ப கல்வி வழங்குவதே அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் நோக்கம். அத்தரமான கல்வி நாட்டில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கிறதா? என்பதை உறுதி செய்வதற்காக பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்படும்போதும்,அதன்பின்னர் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும்போதும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கடுமையான ஆய்வுகளை நடத்தி வருகிறது என்றார்  அக்குழுவின் தலைவர் பேரா. அனில் டி.சஹாஸ்கரபுத்தே.
இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பாலகுருசாமியிடம் கேட்டபோது,”நாட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன.தமிழ்நாட்டில் உள்ள பல பொறியியல் கல்லூரிகள் மிக்க் குறைந்த மாணவர்களுடன் தான் செயல்படுகிறது. சரியான கட்டமைப்பு வசதிகளும், போதுமான தரமும் இல்லாத பொறியியல் கல்லூரிகளில்  மாணவர்கள் சேர விரும்புவதில்லை. எனவே மாநில அரசு இதுபற்றி ஆய்வு நடத்தி பொறியியல் கல்லூரிகளின் தரங்களை கண்டறியவேண்டும். இப்படி தரமான பொறியியல் கல்லூரிகளை மாநில அரசு மாணவர்களுக்கு  அடையாளம் காட்டவேண்டும் என்றார்.
நடப்புக் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
*************************