சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வந்த மழை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாசன குளங்களில் 3,794 பாசனக் குளங்கள் நூறு சதவிகிதம் நிரம்பியுள்ளன என தமிழ்நாடு நீர்வளத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வந்தது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கனமழை கொட்டியது. இதனால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பின. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வந்த மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் போன்ற ஏரிகளும் முழு கொள்ளவதை எட்டின. இதனால், உபரி நீர் கால்வாய்களில் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,   தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு வாரங்களாகவே விடாமல் மழை பெய்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 3,794பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பின என தெரிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு;

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்வதால் கடந்த 24 மணி நேரத்தில் 308 குளங்கள் நிரம்பின.

அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 குளங்களில் 889 பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன.  தஞ்சை மாவட்டத்தில் 641 குளங்களில் 329 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 564 பாசனக் குளங்களில் 212 குளங்கள் நிரம்பின.

சென்னையை அடுத்த திருவள்ளூர்  மாவட்டத்தில் 179 பாசன குளங்களும், செங்கல்பட்டுமாவட்டத்தில் 212 குளங்களும், விழுப்புரம் மாவட்டத்தில்111 குளங்களும், தென்காசியில் 179 குளங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 69 குளங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 57 குளங்களும், கோவையில் 12 பாசனக் குளங்களும் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன.

சிவகங்கையில் 280 குளங்கள் நிரம்பின, திருவண்ணாமலையில் 294 குளங்கள் நிரம்பின, புதுக்கோட்டையில் 172 குளங்களும், ராணிப்பேட்டையில் 161 குளங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 100 குளங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 குளங்களும், கிருஷ்ணகிரியில் 76 குளங்களும், ஈரோடு மாவட்டத்தில் 14 குளங்களும் , குமரி மாவட்டத்தில் 18 குளங்களும் நிரம்பி உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.