சென்னை: வடிவேலு உள்பட 35பேருக்கு வழங்கப்பட்டது போலி  டாக்டர் பட்டம், அதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பில்லை என‘ அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளதுடன், இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பரிந்துரை செய்ததால்தான் அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி அரசு முத்திரையுடன் கடந்த வாரம் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு 35 பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  இது போலி என  கூறப்படுகிறது.

‘இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். அப்போது, இந்த பட்டமளிப்பு நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும், பல்கலைக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனியார் நிறுவனம் நடத்திய பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலை. அரங்கத்தை பயன்படுத்தினர்.

இந்த அரங்கத்தை  கேட்டு,  நவம்பர் மாதமே அனுமதி கோரியதாகவும்,  முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாக கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டது. அதனால் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால்,  ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தை ஏமாற்றியுள்ளனர் என்றவர், அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம்; இதுபோன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம் என தெரிவித்தார்.

தனியார்  நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது அண்ணா பல்கலை கழகத்தின் டாக்டர் பட்டம் அல்ல என்பவர், அண்ணா பல்கலையில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக  சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டு , பட்டம் வழங்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்