ops natham
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில மூத்த அமைச்சர்கள் ஊழல் செய்து குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமைக்கு தெரியாமல் பதுக்கி வைத்தது குறித்தும், அப்பணத்தை மீட்க ஆளுங்கட்சியின் தலைமை மேற்கொண்டு வரும் சாம, பேத, தான, தண்ட முறைகள் குறித்தும் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 58 மாத ஆட்சியில் ஊழல் செய்வதையும், கடந்த ஒரு மாதத்தில் அமைச்சர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலப் பணிகள் நடந்தனவோ இல்லையோ அனைத்து துறைகளிலும் ஊழல்கள், முறைகேடுகள், சுரண்டல்கள் ஆகியவை மட்டும் முழு நேரப் பணியாக நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள் எவரும் திட்டங்களை வகுத்து செயல்படுபவர்களாக இல்லை. மாறாக, ஒவ்வொரு துறையில் ஊழல் செய்து அந்த தொகையை தலைமையிடம் செலுத்தி அவர்கள் தரும் கமிஷன் தொகையை பெற்றுக் கொள்ளும் தரகர்களாகவே செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஊழல் மூலம் குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமையிடம் கணக்குக் காட்டாமல் தாங்களே பதுக்கிக் கொண்டதாக உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களை அடுத்து, ஐவர் குழு என்றழைக்கப்படும் 5 அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி பல்லாயிரம் கோடி பணமும், சொத்துக்களும் மேலிடத்தால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின. 2 அமைச்சர்கள் உடனடியாக உண்மையை ஒப்புக்கொண்டு பணத்தை ஒப்படைத்துவிட்டதால் அவர்கள் மன்னிக்கப்பட்டதாகவும், மற்ற அமைச்சர்கள் தொடர்ந்து விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள் பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது மட்டுமின்றி, அவரது மகனும் சட்டவிரோத காவலில் வைத்து 3 நாட்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டதுடன், தம்மிடம் உள்ள பணம் மற்றும் சொத்துக்களை ஒப்படைத்ததையடுத்து நேற்று முன்நாள் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கடந்த 6 நாட்களாக எங்கிருக்கிறார்? என்பதே தெரியவில்லை என்றும் அவரும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு ரூ.30,000 கோடி என்றும், அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலிடத்திற்கு தெரியாமல் 5 அமைச்சர்கள் பதுக்கி வைத்த பணத்தின் மதிப்பு மட்டுமே இவ்வளவு என்றால், 5 ஆண்டுகளில் நடந்த மொத்த ஊழலின் மதிப்பை கனக்கிடும் போதே தலை சுற்றுகிறது.
மூத்த அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்துறை, மதுவிலக்குத் துறை, கல்வித்துறை, உயர்கல்வித்துறை, போக்குவரத்துத்துறை, சமூக நலத்துறை, உணவுத் துறை, சுரங்கத்துறை ஆகியவற்றில் நடைபெறும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் புகார் கூறிய போதிலும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசின் 18 வகையான ஊழல்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்தும்படி ஆளுனரிடம் மனு அளித்தும் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை. ஆனால், இப்போது வெளியாகியுள்ள செய்திகள் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை உறுதி செய்துள்ளன.
ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இரட்டை லாபத்தை அடையப் பார்க்கிறார் ஜெயலலிதா. அவற்றில் முதலாவது ஊழலுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை; ஊழல் அமைச்சர்கள் மீது கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நேர்மையாளர் என்று காட்டிக் கொள்வது, இரண்டாவது அமைச்சர்கள் பதுக்கிய பணத்தை மீட்டு தமது கணக்கில் சேர்ப்பதன் மூலம் தமது சொத்துக்களின் மதிப்பை அதிகரித்துக் கொள்வதாகும். ஆனால், இதுபோன்ற செப்படி வித்தைகளின் மூலம் தமிழக மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.
அமைச்சர்களின் ஊழலில் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு உண்டு என்பதால் அவர் மீதும், மூத்த அமைச்சர்கள் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர்களிடம் இருந்து சட்ட விரோதமாக மீட்கப்பட்ட பணம் மக்களுக்கு சொந்தமானது என்பதால் அதன் மதிப்பை வெளிப்படையாக அறிவித்து அரசுக் கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’என்று வெளிப்படையாக கூயுள்ளார்.