கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 முஸ்லிம் இளைஞர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த 23-ந் தேதி உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக பயங்கர சப்தத்துடன் கார் வெடித்து சிதறியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இ காரில் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் எடுத்துச்சென்றபோதுதான் கார் வெடித்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களும் காரில் இருந்த எடுக்கப்பட்டன.

இநத் கார் குண்டுவெடிப்பில்   உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என்பது விசாரணையில்  தெரியவந்தது. அதைத்தொடர்ந்து காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக முபினின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. முபின் கூட்டாளிகள் என மொத்தம் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 6பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை அடுத்த மாதம் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி, அவர்கள் கோவை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பதற்றத்தை ஏற்படுத்த திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களின் இடங்களிலும் என்ஐஏ சோதனை நடத்தியது. இந்த சம்பவத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்பி ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. உமர் பரூக், பெரோஸ் கான், தவ்ஃபிக் ஆகிய 3 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்!