திருப்பதி பிரமோற்சவம் 2வது நாள்: சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி எழுந்தளினார்

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று 2வது நாள் விழா நடைபெறுகிறது. இன்றைய விழாவில் சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சேஷ வாகனத்தில் மலையப்பசாமி

நேற்று மாலை 4.45 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, மூலவர் வெங்கடாஜலபதிக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் தமது தலையில் சுமந்தபடி குடும்பத்துடன் வந்து வெங்கடேஸ்வர சுவாமிக்கு சமர்ப்பித்து வழிபட்டார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக, நான்கு மாட வீதிகளில் மலையப்ப சாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு, வழிபட்டனர்.

பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வகையில் பல்வேறு வேடங்களை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றதுடன், கோலாட்டம் ஆடி, பஜனையும் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் 2வது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சேஷ வாகனத்தில் வந்து மலையப்ப சாமி அருள் பாலித்து வருகிறார.  இரவு அம்ச வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.

நாளை 15-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடைபெறும்.
English Summary
2nd day of Tirupathi Piramorcavam celebration