சென்னை: மாநகராட்சி தேர்தலையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தை விதி மீறியதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் முறைகேடுகள், வாக்காளர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி  தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கையையில்,  பறக்கும்படை குழுக்கள் மூலமாக இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய 25 விதிமீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக 12 புகார்களும், வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீ. தூரத்திற்குள் தேர்தல் அலுவலகம் அமைத்தது தொடர்பாக 4 புகார்களும் பதியப்பட்டு உள்ளது.

அதுபோல, 20 பேருக்கு மேல் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக 3 புகார்களும், விளம்பரப் பலகைகள், கொடி தோரணங்கள், பேரணி, அனுமதி இன்றி பிரசாரம், விதிமுறைக்கு புறம்பான கூட்டம், பொதுமக்களுக்கு புடவை வழங்கியது போன்ற விதிமீறல்கள் தொடர்பாக தலா ஒரு புகார் என 6 புகார்கள் என மொத்தம் 25 புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் மீது  தகுந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.