உலகக் கோப்பை கால்பந்து: 16-ஐ வீழ்த்திய 61..!

நெட்டிசன்:

saravanan savadamuthu அவர்களின் முகநூல் பதிவு:

H குரூப்பில், உலகத் தர வரிசைப் பட்டியலில் 16-வது இடத்தில் இருக்கும் கொலம்பியாவும், 61-வது இடத்தில் இருக்கும் ஜப்பானும் இன்று நடந்த முதல் போட்டியில் சந்தித்தன.

சாதாரண ஜப்பான்தானே என்று நினைத்த கொலம்பியன்களுக்கு ஆட்டம் துவங்கிய 3-வது நிமிடத்திலேயே அதிர்ச்சியைக் கொடுத்தனர் ஜப்பான் அணியினர்.

மின்னல் வேகத்தில் கொலம்பியாவின் முன் படையினரை தகர்த்து கோல் ஏரியாவுக்குள் நுழைந்து அற்புதமாக ஒரு ஷாட் அடித்தார் ஜப்பான் வீரர் Hagawa. ஆனால் அந்த பந்தை தனது வலது கையினால் தடுத்துவிட்டார் கொலம்பிய வீரர் Sanchez.

 

பொதுவாக சர்வதேச போட்டிகளில் தெரிந்து யாருமே செய்யத் துணியாத செயல் இது என்பதால் அம்பயர் கொஞ்சமும் யோசிக்காமல் ரெட் கார்டு கொடுத்து Sanchez-ஐ வெளியேற்ற.. இதன் பின்பு 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயம் கொலம்பியாவிற்கு ஏற்பட்டது.

கூடவே பெனால்டி கிக்கிற்கும் அம்பயர் அனுமதி கொடுத்தார். இதற்கே கொலம்பிய வீரர்கள் அம்பயரை சுற்றிச் சுற்றி வந்து ரகளை செய்தார்கள். ஆனாலும் மாற்றமில்லாததால் அரங்கத்தில் இருந்த அத்தனை ஜப்பான் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் இணங்க ஜப்பானிய வீரர் Hagawa அதனை சிம்பிளாக கோலாக்கினார். பெனால்டியை வாங்கிக் கொடுத்த கொலம்பிய வீரரின் எண்ணும் 6-தான். அதை கோலாக்கிய ஜப்பானிய வீரரின் எண்ணும் 6-தான்.

கோலாக்கியாச்சே என்கிற சந்தோஷத்தில் ஜப்பானியர்கள் முன்னேற.. கோலாக்கிவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் கொலம்பிய வீரர்கள் இன்னும் ஆக்ரோஷத்துடன் கிளம்பினார்கள்..

11-வது நிமிடத்தில் மிக அழகான பாஸிங்கில் கிடைத்த ஒரு வாய்ப்பை கொலம்பிய வீரர்கள் சரியாகப் பயன்படுத்தினாலும் பந்து மிகச் சரியாக ஜப்பானிய கோல்கீப்பரின் கைகளில் சரண்டரானது.

இதேபோல் 33-வது நிமிடத்தில் இன்னொரு குட் பாஸிங்கில் கிடைத்த பந்தையும் கொலம்பிய வீரர்கள் கோலுக்குள் தள்ளிவிட பார்க்க அதுவும் சமர்த்தாக கோல் கீப்பரின் கைக்குள் போய் அமர்ந்து கொண்டது.

38-வது நிமிடத்தில் ஜப்பானிய ஏரியாவில் கொலம்பிய வீரரை கீழே தள்ளிவிட்டதால் பவுலாகி ப்ரீ கிக் கொலம்பிய அணிக்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கச்சிதமாக தரையில் உருட்டியே கோல் போஸ்ட்டை நோக்கி அடித்துத் தள்ளினார் கொலம்பிய வீரர் Quintero.

வந்த பந்தை கோல் போஸ்ட்டுக்குள் விழுந்து தடுத்தார் ஜப்பானிய கோல் கீப்பர். ஆனாலும் இது கோல்தான் என்று கொலம்பிய வீரர்கள் கொண்டாட.. கொலம்பிய ரசிகர்களின் விசில் சப்தமும், டமாரம் சப்தமும் காதைத் துளைத்தது.

ஆனால் ஜப்பானிய வீரர்கள் இது கோல் இல்லை என்று அம்பயரிடம் புகார் சொல்லிக் கொண்டேயிருக்க.. அவர் வெளியில் இருந்த இரண்டாவது அம்பயரிடம் கருத்துக் கேட்க அந்தக் காட்சி மெகா ஸ்கிரீனில் ரீவைண்ட் செய்து காண்பிக்கப்பட்டு அது கோல்தான் என்று தீர்ப்பானது.

இப்படி இடைவேளையின்போது 1-1 என்கிற கோல் கணக்கில் சமமாக நின்றன இரண்டு அணிகளும்..!

இடைவேளைக்கு பின்பு 56-வது நிமிடத்தில் கொலம்பிய வீரர்கள் மிக அழகாக பாஸிங் அண்ட் சேஸிங்கில் கொண்டு வந்து தள்ளிய பந்தை ஜப்பானிய கோல் கீப்பர் லாவகமாக பிடித்து கோல் கனவைச் சிதைத்தார்.

60-வது நிமிடத்தில் அனைவரின் எதிர்பார்ப்பையும் ஏகத்துக்கும் ஏத்திவிட்ட ஜப்பானிய வீரர் Shibaski ஒரு கோல் முயற்சியைச் செய்து பார்த்தார். ஆனால் அது மயிரிழையில் கோலாக மாறாமல் தப்பியது.

64-வது நிமிடத்தில் ஆட்டத்தின் முதல் மஞ்சள் அட்டையை பரிசாகப் பெற்றார் கொலம்பிய வீரர் Wilmar Barrios. ஜப்பானிய வீரர் Kagawa-வை சும்மாவாச்சும் தள்ளிவிட்டுவிட்டு எதுவுமே செய்யாதவரை போல நின்றார். அந்த இடத்தில் அது தேவையில்லாத செயல்.

இடையிடையே இரு அணிகளும் உதிரி வீரர்களை உள்ளே அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். 72-வது நிமிடத்தில் ஜப்பானுக்குக் கிடைத்த ஒரு கார்னர் ஷாட்டை தன் தலையை நோக்கி வந்த பந்தை மிக அழகாக கோல் போஸ்ட்டுக்குள் திருப்பிவிட்டு அதை கோலாக்கினார் ஜப்பானிய வீரர் Yuyu Osako.

நம்பவே முடியாத அதிர்ச்சியானார்கள் கொலம்பியா வீரர்கள். இவர்களைவிடவும் கொலம்பிய அணியின் பயிற்சியாளர் தலையைக் குனிந்து கொண்டு புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தார்.

பின்ன..? 16-வது இடத்தில் இருக்கும் அணியை 61-வது இடத்தில் அணி வீழ்த்துகிறது என்றால் யாரால் ஜீரணிக்க முடியும்..?

இதற்குப் பின்பு கடைசிவரையிலும் பந்து ஜப்பான் வீரர்களின் கால்களிடையே ரவுண்டு சுற்றிக் கொண்டே வந்தது. கிடைத்த இடைவெளியில் கொலம்பிய வீரர்களிடம் அது போனாலும் ஒருங்கிணைப்பு இல்லாததால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

கடைசியாக கிடைத்த எக்ஸ்ட்ரா டைம் 5 நிமிடங்களில் ஏதாவது அதிசயம் நடக்கும் என்று மைதானத்தில் இருந்த அனைத்து கொலம்பியா நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ப்ச்.. அத்தனை பேரையும் ஏமாற்றினார்கள் கொலம்பிய வீரர்கள்..!

கடைசியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோற்றது கொலம்பியா..!

இன்றைய போட்டியில் பாராட்டுக்குரியவர் ஜப்பானிய கோல் கீப்பர்தான்.. 5 கோல் வாய்ப்புகளைத் தடுத்து கொலம்பியாவை மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார்.

Tags: 16-ஐ வீழ்த்திய 61..!, 2018-fifa-world-cup :16 wins the 61th!, உலகக் கோப்பை கால்பந்து: