2015 பீகார் தேர்தல் பாணியில் செல்லும் உபி தேர்தல்: பாஜவுக்கு சிக்கல்

Must read

 

லக்னோ:
2015ம் ஆண்டில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலை போல், அதே பாணியில் தற்போது உபி தேர்தல் களம் அமைந்துள்ளது. இதனால் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீகாரை போன்றது கிடையாது உத்தரபிரதேசம். இது பெரிய மாநிலம். பீகார் தேர்தலில் இந்துத்வா அரசியல் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் தோல்வியடைந்துவிட்டது. பாஜ.வின் மத ரீதியான அரசியல் என்பது உ.பி.க்கு ஏற்கனவே அனுபவம் உள்ளது.

2015ம் ஆண்டு நடந்த பீகார் தேர்தலில் எதிர்கட்சிகளான லாலு, நிதீஷ் கட்சிகள், காங்கிரஸ் ஆகியவை இணைந்து தேர்தலை சந்தித்தது. ஆனால் தற்போது உ.பி.யில் மும்முனை போட்டி நிலவுகிறது. அகிலேஷ், மாயாவதி, மோடி ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. கட ந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பீகாரை விட உ.பி.யில் அதிக இடங்களை பாஜ கைப்பற்றியது. இந்நிலையில் உ.பி.யில் தற்போதுள்ள ஆரம்பகட்ட தேர்தல் பணிகளை பார்த்தால் பீகார் தேர்தல் தான் நினைவுக்கு வருகிறது.

கடந்த 2ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கடந்த லோக்சபா தேர்தலுக்கு கூடிய கூட்டத்தை விட அதிகளவில் கூட்டம் கூடியுள்ளது. ஜாதி அரசியலில் இருந்து உ.பி. மக்கள் வெளியே வர வேண்டும். உபி வளர்ச்சிக்கு இதர கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்று மோடி பேசினார். இதேபோல் தான் அவர் பீகார் தேர்தலிலும் பேசினார். பிரச்சார கூட்டங்களுக்கு கூட்டம் கூடுவது வெற்றியை நிர்ணயம் செய்யாது. ஜாதி அரசியலில் மூழ்கியுள்ள பாஜ அது குறித்து பேசுவது ஏற்புடையதாக இல்லை. அகிலேஷ் புரிந்துள்ள சாதனைகளுக்கு முன்னால் மோடியின் சாதனை குறிப்பிடும்படியாக இல்லை. இதேபோல் தான் பீகாரிலும் நிதிஷ் சாதனைகள் இருந்தது.

பீகாரில் நிதிஷ் செய்த சாதனைகளை செய்யவில்லை என்று மோடி பிரச்சாரம் செய்தார். ஆனால் உண்மை நிலையை மக்கள் அறிந்திருந்தனர். இதேபோல் தான் தற்போது அகிலேஷ் சாதனைகளை மக்கள் அறிந்திருக்கும் சமயத்தில் மோடியின் பிரச்சாரம் வழக்கம் போல் இதர கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்றே இருக்கிறது.

பீகார் தேர்தலில் மோடியின் வெளியூர் பயணங்கள் குறித்து மட்டுமே பாஜ பேசியது. அதேபோல் தற்போது பணமதிப்பிறக்க அறிவிப்பு குறித்து மட்டுமே பாஜ பேசுகிறது. இதர விஷயங்கள் குறித்து பாஜ பேசவில்லை.
பீகாரில் பல கோடி ரூபாயை மூன்று தவணைகளில் மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தேர்தலில் பாஜவுக்கு அது கை கொடுக்கவில்லை. எதிர்கட்சிகளில் பதிலடி இதற்கு தகுந்த வகையில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பிறக்க அறிவிப்பால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மறந்து மோடி தற்போது உபி.யில் பிரசாரம் செய்து வருகிறார். இந்த அறிவிப்பு தோல்வியில் முடிந்துள்ளது. அதனால் மோடி மீதான மதிப்பு குறைந்துள்ளது.
உபி.யில் பாஜவுக்கு தற்போது பிரபலமான முதல்வர் வேட்பாளர் இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது. மோடி உபி முதல்வராக போவதில்லை. அதனால் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி அகிலேஷூக்கும் மாயாவதிக்கும் இடையே தான் அமைந்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article