டில்லி,

விமானத்தில் தகராறு மற்றும்  ரகளையில் ஈடுபடும் விமான பயணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விமான பயணத்தின் போது சக பயணிக்ளுக்கோ, விமான ஊழியர்களுக்கோ இடையூராக சர்ச்சையில்   ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தும் வகையில், புதிய சட்ட திருத்தத்துக்கு  மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் விமான பயணத்தின்போது சிவசேனை கட்சியை சேர்ந்த எம்பி ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் சீட் ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து,  தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி விமான ஊழியரை சரமாரியாக தாக்கினார்.

இதையடுத்து, அவருக்கு விமானத்தில் பயணம் செய்ய விமான நிறுவனங்கள்  தடை விதித்து. பின்னர் பாராளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து விமான பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விதித்துள்ளது.

இது தொடர்பாக விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதிராஜூ கூறியதாவது:-

விமான பயணத்தின் போது தகராறு செய்யும் பயணிகளுக்கு 3 கட்டமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி விமான பயணத்தின் போது மற்றவர்களை மிரட்டினால் முதல் கட்டமாக 3 மாதம் விமான பயணத்துக்கு தடை விதிக்கப்படும்.

2-வது கட்டமாக பாலியல் தொல்லை கொடுத்தால் 6 மாதம் தடை விதிக்கப்படும்.

3-வது கட்டமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் 2 வருடத்துக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.