2ஜி வழக்கில் இருந்து ஸ்டாலினும் தப்ப முடியாது!: வைகோ

Must read

s
கோவை:
“2ஜி ஊழலில் தனக்கு சம்மந்தம் இல்லை என்று கூறி ஸ்டாலின் தப்ப முடியாது.  ஸ்டாலினைவிட அதிகம் உழைத்தவர்கள் திமுகவில் இருக்கிறார்கள். ஆனால், கருணாநிதி மகன் என்பதாலேயே ஸ்டாலின் அக்கட்சியில் முன்னிறுத்தப்படுகிறார்” என்று வைகோ தெரிவித்தார்.
கோவையில் பத்திரிகையாளர்களுக்கு இன்று வைகோ  பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
“திமுக, அதிமுக இரண்டும் ஊழலில் திளைத்த கட்சிகள். 2ஜி ஊழலில் தனக்கு சம்மந்தம் இல்லை என்று கூறி ஸ்டாலின் தப்ப முடியாது.
தி.மு.கவுக்காக ஸ்டாலின் அதிகமாக உழைக்கிறார். ஆனால்
ஸ்டாலினைவிட அதிகம் உழைத்தவர்கள் திமுகவில் இருக்கிறார்கள்.  ஆனால், கருணாநிதி மகன் என்பதாலேயே ஸ்டாலின் அக்கட்சியில் முன்னிறுத்தப்படுகிறார். மக்கள் நல கூட்டணி, தமிழகத்தில், நான்கில் மூன்று  பங்கு தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துவிட்டது.
நாளுக்கு நாள் இக்கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு பெருகிவருவதை கண்கூடாக உணர  முடிகிறது.
வியாபாரி, விவசாயி போன்றோரிடம் தேர்தல் ஆணையம் கெடுபிடி காட்டக்கூடாது. அவர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு ஆவணங்கள் வைத்திருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம், காமராஜர் காலத்தில் கொண்டுவரப்பட்டு, தமிழர்கள் வியர்வையால் வளர்ந்ததாகும்.  அதை, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தனியாருக்கு ஒப்படைக்க  மத்திய அரசு முயற்சித்தது.   நான் வாஜ்பாயை சந்தித்து, 45 நிமிடம் வாதாடி அந்த முடிவை வாபஸ் பெற வைத்தேன்.
இந்த நிலையில், தற்போதைய மத்திய அரசு, நெய்வேலி நிலக்கரி கழகம் என்ற பெயரை, ‘என்.எல்.சி லிமிட்டட் இந்தியா’ என பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.  இயக்குநர் போர்டில் கடந்த வருடமே இம்முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இதை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா என்று ஊழியர்களிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. ஆட்சேபிப்போம் என கூறினால் வேலை போய்விடுமோ, ஊதிய உயர்வில் பிரச்சினை வருமோ என ஊழியர்கள் பயந்தபடி உள்ளனர். எனவே நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் 13500 பணியாளர்களும்  ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” –  இவ்வாறு வைகோ தெரிவித்தார். .

More articles

Latest article