புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 1வது வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என  புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், மாணாக்கர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பல வகுப்புகள் பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தொற்று குறைந்ததும் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த ஆண்டு வழங்கம்போல பொதுத்தேர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஏற்கனவே  புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு கடந்த வாரம் இறுதியில் தொடங்கியது. இந்த தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு  சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,   புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதிக்குள் மாணவர்கள் தேர்ச்சி பட்டியலை கண்காணிப்பு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வருகை நாட்கள் குறைவு, கட்டணத்தை முழுமையாக செலுத்தவில்லை உள்ளிட்ட எந்த ஒரு காரணத்திற்காகவும் அவர்களின் தேர்ச்சியை தடுத்து நிறுத்த கூடாது. எல்.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் நாளையுடன் நிறைவு பெறும். அந்த வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் தொடங்கும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 30-ந் தேதி வரையும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 28-ந் தேதி வரையும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.