சென்னை; தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரத்தில் ரேசன் உணவு பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களை  கடத்தியதாக 193 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்,  54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் உணவு பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று பணம் சம்பாதித்து வருகின்றனர்.  இங்குள்ள இலவச அரிசி, கோதுமை  மற்றும் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும், கடத்தல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதை  தடுக்கும் வகையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் கடந்த வாரம் அதிரடி தொடர் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அதன்படி கடந்த  14.11.2022 முதல் 20.11.2022 வரையிலான ஒரு வார காலத்தில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக கடத்தப்பட இருந்த ரூ, 53,71,209/- மதிப்புள்ள 9447 குவிண்டால் ரேசன் அரியை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் 25 லிட்டர் ரேசன் மண்ணெண்ணெய், 144 கிலோ கோதுமை, இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த 41 எரிவாயு உருளைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 193 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.