கடந்த 2008ம் ஆண்டு இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தை தயாரித்ததன் மூலம் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தது. தொடர்ந்து கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ஆதவன் திரைப்படத்தையும், அதைத்தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்தையும் தயாரித்து வெளியிட்டது ரெட் ஜெயிண்ட் மூவீஸ்.
இன்று உலகமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், 2011ம் ஆண்டே அதற்கான தீர்வை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு மூலம் தமிழ் திரை உலகிற்கு சுட்டிக்காட்டியது ரெட் ஜெயிண்ட் மூவீஸ்.
கதை தேர்வில் இருந்து, வெளியீடு வரை அத்தனையிலும் புகழ் பெற்ற இந்நிறுவனம், சூப்பர் டூப்பர் ஹிட் போட்ட விண்ணைத்தாண்டி வருவாயா மதராசபட்டினம் பாஸ் என்கிற பாஸ்கரன் மைனா போன்ற படங்களிலும் தங்களின் முத்திரையை பதித்தது.
ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, வணக்கம் சென்னை என்று வித்தியாசமான படங்களை திரை உலகிற்கு அறிமுகம் செய்த இந்த தயாரிப்பு நிறுவனம், 2019ம் ஆண்டு கண்ணே கலைமானே என்கிற படத்தை திரை உலகிற்கு அறிமுகம் செய்ததோடு பெரும் பாராட்டையும் பல்வேறு முன்னணி இயக்குனர்கள் இடமிருந்து பெற்றது.
தற்போது 12ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கும், திருமதி.கிருத்திகா உதயநிதி அவர்களுக்கும், திரு. உதயநிதி அவர்களுக்கும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .