அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டெரே பார்க் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட ஆயுள், நம்பிக்கை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் நீர் முயல் மீது இந்த புத்தாண்டு பிறந்துள்ளது இதனை அடுத்து சீனர்கள் உள்ளிட்ட ஆசியர்கள் அதிகம் வாழும் பகுதியான இங்கு இரண்டு நாள் சந்திர புத்தாண்டு (சீன புத்தாண்டு) கொண்டாட்டம் இன்று (சனிக்கிழமை) துவங்கியது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள மான்டெரே பார்க் நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடைபெற்ற ஆடல் பாடல் கொண்டாட்டத்தின் போது அடையாளம் தெரியாத நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் 10 பேர் பலியானதாகவும் 10 பேர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

காவல்துறையினர் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போதும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பியோடி விட்டதாகவும் அவரது கையில் எந்திர துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தெரிகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 10 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அடுத்து உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.