சென்னை

மிழக அரசு வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக பாமக தலைவர் ராமதாஸுக்குப் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

கடந்த 1989 ஆம் வருடம் அப்போதைய திமுக அரசு பிற்படுத்தோருக்கான இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என ஒரு பிரிவை உண்டாக்கியது.  அந்த பிரிவில் வன்னியர் உள்ளிட்ட பல சாதியினர் இடம் பெற்றனர்.   ஆயினும் தனியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டுத் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது.

2021 ஆம் வருடத் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவதாக அவசரச் சட்டம் இயற்றியது.   அப்போதைய முதல்வர் இது தற்காலிகமான ஏற்பாடு எனவும் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.  தற்போது தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது.  இதற்கு பாமக தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து பாமக மூத்த தலைவர் ஜி கே மணி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ஜி கே மணி,

தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 % உள் இடஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி 26-ம் தேதி நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதற்குக் காரணமான ராமதாஸுக்கு பாமக,வன்னியர் சங்கம், சமூக முன்னேற்றச் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் சார்பில் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இட ஒதுக்கீட்டுக்கான எல்லா புகழும் ராமதாஸையே சாரும். அவருக்குப் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் விரும்புகின்றனர்.

ஆனாலும், கொரோனா ஊரடங்கு சூழலில் அத்தகைய விழா தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் பாமக, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்றச் சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளன. வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த பாராட்டு விழா நடக்கும்.விழாவின் நிறைவாக ராமதாஸ் ஏற்புரையாற்றுகிறார். இதில் ஆயிரக்கணக்கானோர் இணைய வழியில் பங்கேற்பர்”

எனத் தெரிவித்துள்ளார்.