சென்னை: தமிழக அரசு அறிமுகப்படுத்திய இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர் என பெருமிதத்துடன் முதலமைச்சர்  டிவிட் பதிவிட்டுள்ளார்.

2021ம் ஆண்டு டிசம்பர் 18ந்தேதி செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தின்படி ஏராளமானோர் பயன் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சொன்னதைச் செய்வது மட்டுமல்ல; சொல்லாமலும் செய்வோம். செய்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் கோல்டன் ஹவர்ஸ் காலக்கட்டத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென, கடந்த 18-12-2021 அன்று இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் தொடங்கி வைத்தேன்.

இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் உருவான இந்தத் திட்டம், ஒரு முன்மாதிரி திட்டம். இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-ஆவது பேராகப் பனிமலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைந்திருக்கிறார். ஒன்றரை லட்சம் பேர் அல்ல; அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்டுள்ளன என்ற நெகிழ்வோடு இதனைப் பகிர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.