vijayakanth-angry-still

வேசமான தலைவர்கள் என்று பெயரெடுத்தவர்கள் பலர் உண்டு.  அவர்கள் பேச்சில் ஆவேசம் இருக்கும். போராட்டத்தில் ஆவேசம் இருக்கும். ஆனால் விஜயகாந்த் அப்படி பெயர் எடுத்திருப்பதற்கு காரணம்.. நாம் அறிந்ததுதான்!

தனது கட்சிக்காரர்களை..எம்.எல்.ஏக்களை, பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைகிறார், தலையில் குட்டுகிறார், காலால் எட்டி உதைக்கிறார். சட்டமன்றத்தில் நாக்கை மடித்து மிரட்டுகிறார்.

இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல.. உலக வரலாற்றிலேயே இப்படி ஒரு தலைவர் இருந்ததில்லை.

இதனால் இவரது செல்வாக்கு சரிகிறது என்பது ஒருபக்கம் இருக்க..  ஒரு கட்சியின் நிறுவனத்தலைவர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் இப்படி நடந்துகொள்கிறாரே என்று ஜனநாயகத்தில் அக்கறை உள்ள அனைவரும் வருத்தப்படுகிறார்கள்.

தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்தார் விஜய்காந்த். இத்தனைக்கும், தவறு விஜயகாந்த் மீதுதான். தனது வேட்பாளரின் பெயரை மறந்து தவறாக பாண்டியன் என்று பேசினார் விஜயகாந்த். பதறிப்போன அந்த வேட்பாளர் தனது பெயர் பாண்டியன் அல்ல, பாஸ்கர் என்று சொன்னதற்காகத்தான் அத்தனை பேர் எதிரில் அவருக்கு கும்மாங்குத்துவிட்டார்.

14-1447496833-vijayakandh-121-600

சட்டசபையில் தன்னை விமர்சனம் செய்த ஆளுங்கட்சியினரை நோக்கி நாக்கை துருத்திக்காட்டி மிரட்டினார்.

கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை கடந்த 2012  அக்டோபரில் விமான நிலையத்தில் வைத்து” நாய்,” என்று ஏசினார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராமநாதரபுரத்தில் பிஜேபி வேட்பாளர் குப்புராமுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது, தொண்டர் ஒருவர் குரல் எழுப்ப.. மேடையில் இருந்த விஜயகாந்த், “யாருடா அவன்.. வாடா.. நேர்ல வாடா..மோதிப்பார்ப்போம்” என்று ஓப்பன் மைக்கில் சவால்விட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் இவரிடம் சிக்கியவர்கள் மீண்டும் பத்திரிகையாளர்கள்.  பிரதமர் மோடியை சந்தித்து விட்டு சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜயகாந்த்.

அப்போது, கேள்வி கேட்ட நிருபரை நோக்கி.. “போய்யா உனக்கு பதில் சொல்ல முடியாது. அடி தூக்கி அடிச்சிருவேன்” என்று நாக்கை துருத்தி சத்தமிட்டு கோபத்தைக் காட்டினார்.

வெளிநாட்டிலும் இவரது கோபப்புகழ் பரவ ஆரம்பித்தது. மலேசியாவில் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள முயன்ற ஷாஜகான் என்ற ரசிகருக்கு விட்டார் ஒரு பளார்!

ஆனால் பொது இடத்திலேயே, கோபத்தை அடக்க முடியாத தனது குணத்தை மாற்றிக்கொள்ள இவர் விரும்பவில்லை. “மனுசன் என்றால் கோபம் வரனும், கோவம் இருக்கற இடத்தில்தான் குணமிருக்கும்” என்று அவ்வப்போது விளக்கம் கொடுத்துவந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஏதோ கேட்க.. புரியாத விஜயகாந்த் பக்கத்தில் வந்து சொல்லுமாறு கேட்டார். செய்தியாளர் தயங்க, “பக்கத்துல வாங்க அடிக்க மாட்டேன்” என்று கூறி சிரித்தார்.

அந்த அளவுக்கு ஆகிவிட்டது அவரது “டென்சன்”. இந்த நிலையில் பலரும் அவரது கோபத்தைக்கட்டுப்படுத்த கூற (பயந்துகொண்டே!).. விஜகாந்தும் அதற்கான நடவடிக்கை எடுத்தார்.

கோபம் குறைவதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் விஸ்வாமித்திரர் கோவிலில் யாகம் செய்தார். பிறகு, சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈசா யோகா மையத்திலேயே ஒருவாரம் தங்கி யோகா பயிற்சி எடுத்தார்.

 

டாக்டர் சிவ சுப்பிரமணியம்

“இப்போ மனசும் உடம்பும் பிரஸ்ஸ்ஸா இருக்கு” என்றவர், மறுநாளே,  பண்ருட்டி எம்எல்ஏ சிவக்கொழுந்துவை அடித்தார், வேன் ஓட்டுநருக்கு உதையும் கொடுத்தார். இதுவும் பலரும் பார்க்கவே நடந்தது.

மக்களாட்சியில் யாரும் யாருக்கும் அடிமை அல்ல. ஆனால் அந்த ஆட்சியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எம்.ஏ., கட்சித்தலைவர் இப்படி தொடர்ந்து நடந்துகொள்வது, மக்களாட்சிக்கு ஆபத்து அல்லவா?

ஆகவே விஜயாந்தின் இந்த “அதிரடி” செயல்பாட்டுக்கு என்ன காரணம் என்று மனநல நிபுணர் டாக்டர் சிவசுப்ரமணியம் அவர்களிடம் கேட்டோம்.

மருத்துவர் சிவசுப்பிரமணியம்
மருத்துவர் சிவசுப்பிரமணியம்

அதற்கு அவர் கொடுத்த விளக்கம்:

“தன்னைச் சுற்றி இருக்கும் பொதுக் கட்டுப்பாடுகளை மதித்து நடப்பவரே இயல்பான மனிதர்.  ஆனால் மது மயக்கத்தில் பலர், பிறரைப்பற்றி கவலைப்படாமல் நடந்துகொள்வார்கள். பிறரை அடிப்பார்கள், சிலரோ தங்களைத் தாங்களே அடித்துக்கொள்வதும் நடக்கும்.

இப்படி மது மயக்கம் இல்லாமல் ஒருவர் நடந்துகொள்கிறார் என்றால், அது பர்சனாலிடி டிஸ்ஆர்டர். இதை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை.  (personality disorder) என்போம். எம்.டி.பி. – மேனிக் டிப்ரசிவ் சைக்கோஸில் (manic depressive psychosis) என்பதும் உண்டு.

பிறர் உணர்வுகளைப்பற்றி கவலைப்படாத தன்மை. தான் என்ன நினைக்கிறோமோ அதுதான் சரி. அதன்படி நடக்கவில்லை என்றால் உடனே கடுமையாக பேசுவது, அடிப்பது போன்ற குணம்.

அதே நேரத்தில் இதை ஒரு மனநோய் என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் என்னதான் ஆத்திரப்படுபவராக இருந்தாலும், துப்பாக்கி வைத்திருப்பவரை தாக்குவாரா.. அதே போல தனது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பவரை.. அது பாஸ் ஆகவோ, மனைவியாகவோ இருக்கட்டும்.. தாக்குவாரா?  ஆக, தன் உணர்வு இருக்கிறது. அதே நேரம், தான் மதிக்காதவரை எடுத்தெறிந்து பேசும், தாக்கும் போக்கு இருக்கிறது.

இந்த குணத்தைப் போக்க, பாதிக்கப்பட்டவர்தான் முயற்சி எடுக்க வேண்டும். இதற்கு யோகா, தியானம் போன்றவை மட்டுமே தீர்வாகாது. உரிய மருத்துவரிடம் முறையாக சிகிச்சை பெற வேண்டும். அதற்கு துணையாக யோகாவோ, தியானமோ இருக்கலாம்” என்றார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத மிகச் சில தலைவர்களுள் விஜகாந்த் ஒருவர்.  பொது இடத்தில் ஆத்திரப்டும் தனது குறையை மட்டும் விலக்கிவிட்டு, அவர் முழு தகுதியுள்ள தலைவராக வாழ்த்துகிறோம்!

  • டி.வி.எஸ். சோமு