ajith-vijay-rajini_hot_feed

தீபாவளி அன்று வெளியான அஜீத்தின் வேதாளம், அன்று மட்டும் 15.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். அதுவும் வரியை தவிர்த்து!

“முதல் நாள் வசூலில் இது ஒரு புதிய சாதனை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார் பாக்ஸ் ஆபீஸ் பிரமுகர் ஸ்ரீதர் பிள்ளை.

ரஜினியின் லிங்கா 12.8 கோடி ரூபாய், முதல் நாள் வசூல் ஆனது என்றார்கள். ஆனால் அந்த படம் பெயிலியர் என்று பெரும் பிரச்சினை எழுந்தது. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு என்று தயாரிப்பாளர் கழுத்தில் துண்டைப்போட்டார்கள் விநியோகஸ்தர்கள். அடுத்து ரஜினியை நோக்கி பாய்ந்தார்கள். அவரும் சத்தப்போடாமல் பணத்தை திருப்பிக்கொடுத்தார்.

கடந்த அக்டோரர் 1ம் தேதி வெளியான விஜய்யின் புலி படத்துக்கும் இப்படித்தான் அலப்பறை செய்தார்கள். “நான்கே நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 32 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது” என்று செய்தியை பரப்பினார்கள். அது மட்டுமல்ல… “ பாகுபலி’ தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் சென்னையில் 363 காட்சிகள் திரையிடப்பட்டு, மூன்று நாட்களில் 1.66 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. ஆனால் அதே மூன்று நாட்களில் புலி படம், 2 கோடிக்கும் மேல் (சென்னையில் மட்டும்) வசூலித்துவிட்டது” என்றார்கள்.

கடைசியில் புலி, வரிவரியாய் அடிவாங்கியதுதான் மிச்சம். இந்தப் படத்தில் நடித்த ஸ்ரீதேவி சம்பள பாக்கி குறித்து புகார் தெரிவிக்க.. உண்மையை உடைத்தார்கள் புலி பட புரடியூசர்கள்.

ஸ்ரீதேவிக்கு சம்பள பாக்கி ஏதும் இல்லை என்றவர்கள் அதோடு, “புலி படத்தால் நட்டம் தான் ஏற்பட்டுள்ளது. அதை மனதில் கொண்டு இந்த பிரச்சினை சுமுகமாக முடிய வேண்டுகிறோம்” என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.   ஆக நட்டம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

அப்புறம் ஏன், படம் ரிலீஸான உடன் இத்தனை கோடி வசூல், அத்தனை கோடி வசூல் என்று அலப்பறை?

பெரிய ஸ்டார்கள் இல்லாத “காக்கா முட்டை” போன்ற பல படங்கள் சத்தம் இல்லாமல் வசூல் செய்து, விநியோகஸ்தர்கள் தயாரிப்பார்களுக்கு லாபம் கொடுக்கின்றன.

ஆனால் மாஸ் ஹீரோ படங்கள் ரிலீஸ் ஆகும்போதுதான் இப்படி (பொய்யான?) வசூல் கணக்கு வெளியிடப்படுகிறது.

என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா…

  • இனியா