ko

ன்முறையைத் தூண்டும் வகையிலும்,  அருவெறுக்கத்தக்க வகையிலும் பதிவு மற்றும் பின்னூட்டம் இடுவது முகநூலில்  தொடர்ந்து நடந்துவருகிறது.

பிரபல பெண் கவிஞர ஒருவருக்கு சமீபத்தில் சிலர் தொடர்ந்து ஆபாச செய்திகளை அனுப்பியதும், இது குறித்து அவர் காவல்துறையில் புகார் கொடுத்ததும் சமீபத்திய உதாரணம்.

இந்த நிலையில், “முகநூல் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும்  அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகளை சமப்ப்பிக்க வேண்டும்” என்று முகநூல் நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக ஒரு செய்தி பரவியிருக்கிறது.

பிரபல எழுத்தாளரும், முகநூலில் தொடர்ந்து எழுதி வருபவருமான வா.மு.கோமு  இது பற்றி என்ன சொல்கிறார்? :

“முகநூலைப் பயன்படுத்துவது என்பது அவரவர் புத்தி சார்ந்த  விசயம். யாருக்கு எதன் மீது நாட்டமோ அதன்படியே இயங்குகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை முகநூலை வரப்பிரசாதமாக  பார்க்கிறேன்.  என்  புத்தகங்கள்  பற்றியான  தகவல்களை அறிவிக்க,   என் சிறுகதைகள்  ஏதேனும்  இதழில் வருகையில்  அதுபற்றிய  தகவல்களை   தெரிவிக்க  முகநூல் உதவுகிறது.

எமது நடுகல் பதிப்பகம் மூலம் என்னென்ன  புத்தகங்கள்  வருகின்றன  என்பதை தெரிவிக்கவும்  ஒரு களமாக முகநூலை பயன்படுத்துகிறேன்.

“இப்படி போட்டுட்டா நாங்க புக் வாங்கி படிச்சிடுவமா?” என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார்.

“முகநூலில் நான் வேறு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்!”  என்று நான் கேட்டேன்… அதன் பிறகு அவரிடமிருந்து சத்தமே இல்லை.

இப்படிப்பட்ட நண்பர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

நான் முகநூலுக்கு வந்த மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை  சண்டை  சச்சரவுக்கான  களமாக  என்  பக்கத்தை நான் பயன்படுத்தே இல்லை.   வெளிப்பக்கங்களில்  தங்கள்  கருத்துக்களுக்காக சண்டையிடும் எத்தனையோ நண்பர்கள் எனக்கும் நண்பர்களாக இயங்குகிறார்கள் என்றாலும் என் பக்கம் அமைதியாகவே இருக்கிறது!

அதே நேரம், ஆமை  மீது ஏறி நின்று  புகைப்படமெடுத்து  முகநூலில் வெளியிட்டவர்  உடனடியாக கைது செய்யப்படுகிறார்: குழந்தைகள் பற்றி தவறான கருத்துகள் வெளியிட்டவர் தண்டிக்கப்படுகிறார். இப்படிப்பட்ட விவகாரங்களும் இதே முகநூலில் நடக்கத்தான் செய்கின்றன.

அது மட்டுமா…

பெண்கள் மடியில் படுத்திருந்தவன் அந்த புகைப்படத்தை தன் பக்கத்தில் ஏற்றுகிறான். அவர்கள் என் தோழிகள் என்கிறான். ஆனாலும் பெண்களின் உறவினர்கள் மெனக்கெட்டு தேடிப்போய் அவனை உதைக்கிறார்கள். இது தவறான விசயம் தானா என்பது படிப்போர் அறியாததா?

ஆகவே முகநூலில் கட்டுப்பாடு தேவையா என்ற கேள்வி எழுவது நியாயமே.

ஆனால், கட்டுப்பாடுகள் என்பதை அடுத்தவர் உருவாக்கிய பிறகுதான்  அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அல்ல! தலைக்கவசம் என்பது உயிர் காக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும், அரசு அறிவிக்கையில் குறை கூறிக்கொண்டே அணிகிறார்கள்.

அது போல கருத்து விசயத்தில் இருக்க வேண்டியதில்லை. இங்கே,  கட்டுப்பாடுகள் எனபதை அவரவரே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலர் கருத்துச் சுதந்திரம் என்பார்கள்.  ஆனால், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பிறரை பாதிக்கும்படி எழுதுவது அடுத்தவர் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பது ஆகாதா?

ஆகவே கருத்துச் சுதந்திரம் என்பதற்கான எல்லையை நாம் உணர்ந்து எழுத வேண்டும்.

அநாகரீகமாக எழுதுவோரில் ஆகபெரும்பான்மையினர், தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு இயங்குபவர்கள்தான். ஆகவே, முகநூல் கணக்கு தொடங்க அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக சொல்லப்படுகிறது.

அது நல்ல விசயம் என்றே தோன்றுகிறது.  தங்களது அடையாளம் தெரியும்படி இருந்தால் அநாகரீக பதிவர்கள் பலரும் நாகரீக பதிவர்களாகிவிடுவார்கள் என்பது உண்மையே!”