raamanna

ன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள்.

பொதுவாகவே விஜயகாந்த் கோபக்காரர்.. கட்சிக்கார்களை.. குறிப்பாக பத்திரிகைக்காரர்களை அடித்து துவம்சம் செய்துவிடுகிறார் என்கிற ரேஞ்சுக்கு ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல.

கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு முன் அவரை பேட்டி கண்டிருக்கிறேன். காலை ஏழு மணிக்கு வீட்டுக்கு வரச் சொன்னார். வழக்கம் போல கால் மணி நேரம் முன்பாகவே போய்விட்டேன். அதையறிந்த அவர், “ஓ.. சீக்கிரமாவே வந்துட்டீங்களா.. சரி வாங்க பேசுவோம்” என்று, அப்போதே பேட்டிக்கு ஆயத்தமாகிவிட்டார்.

எனது எதிர்மறையான கேள்விகள் எதற்கும் கோபப்படவில்லை.

“எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்பேன் என்கிறீர்கள். அவரது ஆட்சிபற்றியும் பல எதிர்மறை கருத்துக்கள் உண்டே”, “தேசியமும் திராவிடமும் எப்படி ஒன்றாகும்” “உங்கள் கொள்கைகள் அண்ணாயிசம் போல் குழப்பமாக உள்ளனவே” “குடும்பத்தினரையே முன்னிருத்துகிறீர்களே” “லீ கிளப் என்ற பெயரில் காஸ்ட்லி பார் நடத்துகிறீர்களே” என்று ஏகப்பட்ட எதிர்மறை கேள்விகள்.

கேள்விகளை கவனமாக உள்வாங்கி விரிவாக பதில் சொன்னார்.

captain

“எனக்கு படிக்கிற பழக்கம் கிடையாது. படிச்சவங்க சொல்லும்போது கவனமா கேட்டுக்குவேன். அதே மாதிரி எனக்குத் தெரியாத விசம்னா, தெரிஞ்சவங்ககிட்ட தயக்கம் இல்லாம கேட்டு தெரிஞ்சுக்குவேன்” என்று பகட்டில்லாத மனிதராக அவர் பேசியது இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் பலவித விமர்சனங்கள் இருந்தாலும், எதார்த்தமான அந்த மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

சென்னை தி.நகரில் இருக்கும் பாரம்பரிய கோயிலுக்கு நண்பர் இழுத்துச் சென்றார். அங்கே ஒரு தூணில் இருந்த அறிவிப்பு: “பக்தர்கள் தங்கள் நகைகளையும், குழந்தைகள் நகைகளையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்துக்கொள்ளவும்!”

periyar1
அதைப் படித்ததும் சட்டென எனக்குத் தோன்றியது இதுதான்: “கோயில் தூணிலும் இருக்கிறார் பெரியார்!”

னக்குப் பிடித்தமான பேஸ்புக் தம்பி அவர். இரண்டு முறைதான் நேரில் சந்தித்திருக்கிறோம். ஆனால் அவ்வப்போது அலைபேசுவார். பொதுநல ஆர்வம் உள்ளவர். அவரது பதிவுகளும் பொது நோக்கத்தோடுதான் இருக்கும்.

இன்று அலைபேசியவர், “நாளிதழ் ஒன்றில் நிருபர் பணிக்கு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். ஊர் பிரச்சினை ஒன்று பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரையும் கேட்டிருக்கிறார்கள். விண்ணப்பிக்கவா” என்றார்.

“சரி, உங்கள் ஊரில் இருக்கும் எந்த பிரச்சினை குறித்து எழுதப்போகிறீர்கள்?” என்றேன். “எங்கள் பகுதியில் இருந்து நகரத்துக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாதது குறித்து எழுதியிருக்கிறேன்” என்றவர், அதை மெயிலிலும் அனுப்பினார்.

உடனடியாக மெயிலை ஓப்பன் செய்து படித்தேன்.

“போதிய பேருந்துகள் இல்லாததால் எங்கள் பகுதி மக்கள் அவதியடைகிறார்கள். இன்றைய நவீன உலகில் அமெரிக்காவுக்கு பறப்பதே எளிதாக இருக்கிறது. ஆனால் பக்கத்தில் இருக்கும் ஊருக்கு சென்று வர முடியவில்லை. அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க மட்டும் வருகிறார்கள். வென்றபிறகு தொகுதியை கவனிப்பதே இல்லை” என்று ஒரு பக்கத்துக்கு மேலேயே இருந்தது.

படித்து முடித்தவுடன் அவருக்கு போன் செய்தேன்: “சகோதரா… உங்கள் பேஸ்புக் பதிவு போலவே எழுதியிருக்கிறீர்கள். சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் விசயம் எதுவும் இல்லையே” என்றேன்.

“என்ன அண்ணா இப்படி சொல்கிறீர்கள்” என்று அதிர்ந்துபோய் கேட்டார்.

“ஆமாம் தம்பி… பிரச்சினை குறித்த ஆதங்கத்தை எழுதியிருக்கிறீர்கள். இது பேஸ்புக் பதிவு. அவ்வளவுதான். பத்திரிகையாளனாக இது போதாது” என்ற நான், செய்தி கட்டுரை எழுதுவது எப்படி என்பதை விளக்கினேன்:

“உங்கள் பகுதிக்கு பேருந்து வசதி குறைவாக இருக்கிறது. அதானே பிரச்சினை… முதலில் உங்கள் ஊர் பஞ்சாயத்து அலுவலகத்துக்குச் சென்று அந்த வட்டாரத்தில் எத்தனை கிராமங்கள் இருக்கின்றன, மக்கள் தொகை எவ்வளவு என்பதை விசாரியுங்கள். தினமும் காலை மாலை வேளைகளில் எத்தனை பேர் அந்த பகுதிகளில் இருந்து நகரத்துக்கு செல்வார்கள் என்பதை பலரையும் சந்தித்து பேசுங்கள்.

குறிப்பாக பொது நலனில் அக்கறை உள்ளோரை தேடிப்பிடித்து பேசினால், உங்களுக்கே தெரியாத பலவித தகவல்கள் கிடைக்கும். உதாரணமாக, “ஏற்கெனவே பத்து அரசு பேருந்து வந்தது. இப்போது நான்குதான் வருகிறது. ஆனால் நான்கு தனியார் பேருந்துகள் இப்போது எட்டாகி இருக்கிறது” என்று ஒருவர் சொல்லக்கூடும். இது ஒரு முக்கிய தகவலாக இருக்கும் அல்லவா?

பிறகு, பேருந்து நடத்துனர், ஓட்டுனரிடம் பேசுங்கள். அவர்கள் தயங்கினால், பெயரை வெளியிட மாட்டோம் என்று உறுதி கூறி தகவல் பெறுங்கள். அதன் பிறகு, போக்குவரத்து மாவட்ட அலுவலகத்தை தொடர்புகொண்டு குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் ஏன் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுகின்றன என்று கேளுங்கள். வாய்ப்பு இருந்தால் மக்கள் பிரதிநிதிகளை தொடர்புகொண்டு கேளுங்கள்.

இதையெல்லாம் தொகுத்து கட்டுரையாக்கி அனுப்புங்கள்” என்றேன். “பேஸ்புக் மாதிரி நானே எழுதிவிடலாம் என்று நினைத்தேன்… இதுல இவ்வளவு விசயம் இருக்கிறதா..” என்றார் ஆச்சரியமாக.

“ஆமாம்.. அந்தக் காலத்து திண்ணை, அப்புறம் வந்த டீ கடை பெஞ்ச் மாதிரிதான் பேஸ்புக் பக்கமும். அங்கே நம் ஆதங்கத்தைக் கொட்டலாம். அப்படி கொட்டுபவர்களுக்கு செய்தி தரவேண்டியது பத்திரிகையாளன் கடமை அல்லவா. ஆகவே வெறும் ஆதங்கம் மட்டும் பத்திரிகை செய்தி ஆகாது. தகுந்த புள்ளி விபரங்கள், ஆதாரங்கள், மக்கள் கருத்துக்களோடு செய்தியை அளிக்க வேண்டும்” என்றேன்.

“புரிந்தது!” என்றார் அந்த சகோதரர்.

“அடுத்தமுறை அலைபேசும்போது பத்திரிகையாளராக பேசுங்கள்! என்று மனதார வாழ்த்தி போனை வைத்தேன்!