puchi

“பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். அதே போல குற்றம் காண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்” : திருவிளையாடல் படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம்.

இது நடிகர் பூச்சி முருகனுக்கு முழுதும் பொருந்தும். திரைத்துறை தவிர வெளியில் இவரை நடிகராக அறிந்தவர் எவருமில்லை.  இவர் நடித்தது எல்லாமே சின்னச் சின்ன வேடங்கள்தான்.

ஆனால் நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக, சரத்குமாரை எதிர்த்து இவர் வழக்கு தொடுத்தவுடன், தமிழகத்துக்கே தெரிந்த நபர் ஆகிவிட்டார்.

திருவிளையாடல் பாணியில், “குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கினார்” என்று சொன்னாலும், அவருக்கு ஏற்பட்டது நியாயமான கோபம். அதில் உறுதியாக இருந்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.

சரி,யார் இந்த பூச்சியார்?

இவரது தந்தை சிவசூரியனும் நடிகர். “மந்திரிகுமாரி” படத்தில் இவர் பேசிய “பீம்சிங்.. இதென்ன புதுக்குழப்பம்?” என்கிற டயலாக் அந்தக்காலத்திலேயே ரொம்ப பிரபலம். சர்வாதிகாரி, தூக்குதூக்கி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிவசூரியன்.

தந்தையை பார்த்து முருகனுக்கும் நடிப்பில் ஆசை வந்தது. உயரம் சற்று குறைவாக இருப்பதால், செல்லமாக “பூச்சி” என்று அழைக்கத்துவங்க, பெயருடன் பூச்சியும் ஒட்டிக்கொண்டது.

இவரும் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். வடிவேலுவின் நெருங்கிய நண்பர். ஆகவே வடிவேலு படங்களில் பெரும்பாலும் இவர் இருப்பார் சமீபத்தில்  வடிவேலு ஹீரோவாக நடித்த “தெனாலிராமன்” படத்தில் பார்வை இழந்த பிச்சைக்காரராகவும், “எலி” படத்தில் காவல்துறை அமைச்சராகவும் நடித்திருந்தார்.

திரையில் முகம் காட்டுவது குறைவு என்றாலும் முழு நேர நாடக நடிகர் இவர்.  அதாவது திமுக பிரச்சார நாடகங்களை தமிழகம் முழுதும் நடத்தியிருக்கிறார். நடத்திவருகிறார்.

அது மட்டுமல்ல… தி.மு.க.வின் தொழிற் சங்கம் மற்றும் இலக்கிய அணிகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர். தற்போது தி.மு.க.வின் தலைமைக் கழக செயலாளர்.

அதனால்தான் தற்போதைய தேர்தலில் செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றதும் ஓடோடிப்போய் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார். (வென்றவர்களில் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றவர் இவர் மட்டுமே!)

பூச்சியாருக்கு போன் போட்டால், “எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்.. வாழ்வு வந்தால் அனைவரயும் வாழ வைப்போமே…” என்ற பாடல் பொறுத்தமாக ஒலிக்கிறது.

“போன் ரிங்டோன் போலவே உங்களுக்கு காலம் வந்துவிட்டதே..” என்றால், “எங்களுக்கு என்பது எல்லா நடிகர்களுக்கும்தான்” என்று அடக்கமாக புன்னகைக்கிறார்.

சங்க கட்டிட வழக்கு குறித்து பேசினோம். அதெல்லாம் இன்று தமிழக முடுக்குகளில் இருக்கும் சின்னப்பிள்ளைகளுக்குக்கூட மனப்பாடம் என்பதால் அதைவிட்டுவிடுவோம்.

ஒரே ஒரு மேட்டர் மட்டும்: “உங்க தேவை சங்கத்துக்கு தேவை” என்று இவரை நடிகர் சங்கத்துக்குள் இழுத்தது ராதாரவிதானாம்!