nanum-prabakaranum-1

 

1982-ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி… சென்னைப் பாண்டிபஜாரில் உள்ள ஒரு ஓட்டல்…

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்ட முகுந்தன் என்ற உமாமகேசுவரன் அங்கே வர… பிரபாகரனும் எதிர்பாராமல் அங்கே வருகிறார்.

ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். அடுத்தகணம் அங்கே ஒரு துப்பாக்கிச்சண்டை துவங்குகிறது… அதிரும் வேட்டுகளால் அந்த பகுதியே பதட்டத்துக்குள்ளாக… சுற்றி இருந்தவர்கள் ஆளுக்கு ஒரு புறம் பயந்து பதுங்குகிறார்கள்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பிரபாகரன், இராகவன் ஜோதீஸ்வரன் ஆகியோரை கைது செய்கிறார்கள்.

உமா மகேஸ்வரன் ஓடித்தப்பித்துவிட்டார். ஆனால் கும்மிடிபூண்டி இரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த அவரை பார்த்துவிட்டார்கள் போலீசார். அவரை நெருங்க முயல, போலீசாரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றார் உமா மகேஸ்வரன். ஆனால் இரயில் பாதையில் தடுக்கி விழ… போலீசார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தார்கள்.

பிரபாகரனின் மற்றத் தோழர்களையும் காவல்துறை தீவிரமாக வேட்டையாடத் தொடங்கியது.

பிரபாகரனுக்கும், உமாமகேஸ்வரனுக்கும் அப்படி என்ன பகை?

அந்த பின்னணியை எனக்கு விளக்கியவர் கிட்டு. அவரது வார்த்தைகளிலேயே கேளுங்கள்:

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடக்கக்காலத்தில் அதன் தலைவராக உமாமகேஸ்வரன் என்ற முகுந்தன் இருந்தார். அவர் சர்வேயராக வேலை பார்த்தவர். ஆங்கிலம் கற்றவர். ஆகவே பிரபாகரன் அவரை தலைவராக்கிவிட்டு, இராணுவப் பிரிவுத் தலைமையை மட்டும் தான் வகித்தார்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் என்பவரைச் சுட முயன்று அதில் நாங்கள் தோல்வி கண்டோம். அப்போது சிங்கள காவல்துறையினரால் நாங்கள் தேடித்தேடி வேட்டையாடப்பட்டோம்.

 

nanum-prabakaranum-11

உமாமகேசுவரன்

குறிப்பாக இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரன் மற்றும் இயக்க உறுப்பினர் ஊர்மிளா ஆகியோரை தீவிரமாக தேடினார்கள் சிங்கள காவல்துறையினர். ஆகவே அவர்கள் இருவரும் தப்பித்து, தமிழகம் வந்தார்கள்.

இந்த இடத்தில் முக்கியமான விசயம் ஒன்றை குறிப்பிட்ட வேண்டும்.

புலிகள் இயக்கதில் கடுமையான ஒழுக்கக் கட்டுபாடுகள் உண்டு. உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் இயக்கம் அதை அனுமதிக்கும். ஆனால் ஒழுக்க கேடான உறவுகளுக்கு இயக்கதில் இடமே இல்லை.

உமாமகேஸ்வரன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டார். இயக்கம், அதை அனுமதித்தது. ;ஆனால் ஊர்மிளாவுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது என்பது பின்னாளில் இயக்கத்துக்கு தெரியவந்தது.

இதற்கு இயக்கதில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அப்போது தம்பி (பிரபாகரன்) பெங்களூரில் இருந்தார். அவர் வந்து இது குறித்து விசாரணை நடத்தினார். செல்லகிளி, இரவி, இராகவன், நாகராசன், அய்யர் ஆகிய முக்கிய உறுப்பினர்கள், “உமாமகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார்கள்.

ஆனால், மறுநாள் நடைபெறவிருந்த விசாரணைக்கு வராமல் உமாமகேஸ்வரனும், ஊர்மிளாவும் தலைமறைவானார்கள். எனவே , உமாமகேஸ்வரன் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டார்.

அதன் பிறகு அந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த அன்றுதான் உமாமகேஸ்வரனும், பிரபாகரனும் நேருக்கு நேர் பார்க்கிறார்கள். இதையடுத்துதான் துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடந்தது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. “பிரபாகரன்” என்ற பெயர் பெரிய அளவில் தமிழகத்தில் வெளிப்பட்டது அப்போதுதான்.

இந்த சம்பவத்தை அடுத்துதான், பிரபாகரனின் தோழர்களை தமிழக காவல்துறை வேட்டையாடத் துவங்கியது. அவரது ஆதரவாளர்கள், நெருங்கியவர்கள் என்று சந்தேகப்படுபவர்களின் வீடுகளை சோதனை இடுவது, தீவிர விசாரணைக்கு உட்படுத்துவது என்று ஏக கெடுபிடி. விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி அவ்வளவாக தமிழக மக்கள் அறிந்திராத காலகட்டம்.

இந்த சூழலில் 26-5-1982 அன்று சென்னையில் உள்ள எனது வீட்டையும் சோதனை இட்டது தமிழக காவல்துறை. என்னை விசாரித்து என்னிடம் வாக்குமூலம் வாங்கினார்கள்.

நான் அளித்த வாக்குமூலத்தை கேட்ட காவல்துறை உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

“குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் பயங்கரவாதிகள். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் அவர்கள் மீது மிகக் கடுமையான குற்றங்களைச் சுமத்தியுள்ளது. இந்த நிலையில் நீங்கள் இப்படி ஓர் வாக்குமூலத்தைக் கொடுப்பது உங்களுக்கே ஆபத்தாக முடியும்’’ என்று அதிகாரிகள் என்மீது கொண்ட அன்பினால் எச்சரித்தார்கள். ஆனாலும் நான் கொடுத்த வாக்குமூலத்தை மாற்ற விரும்பவில்லை.

“எதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை. எந்தவொரு விளைவையும் சந்திக்க நான் தயாராகவே இத்தகைய வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கிறேன்” என்றேன்.

விசாரணைக்கு வந்த காவல்துறை அதிகாரிகளே திடுக்கிட்டுப்போகும் அளவுக்கு நான் கொடுத்த வாக்குமூலம்தான் என்ன….?

(அடுத்த வாரம் சொல்கிறேன்…)