12105796_900051936708690_136053910548359431_n

பத்திரிகையாளர், மனைவியுடன் தற்கொலை: காரணம் என்ன?

“அம்மாவும் அப்பாவும் எங்கே…? வீட்டில் ஏன் இவ்வளவு கூட்டம்..?” –  விடை  தெரியாமல்  விழித்துக்கொண்டிருக்கும் ஒன்பது வயது அனிருத்தை பார்க்க, பார்க்க மனம் பதைக்கிறது.

கடந்த 20ம் தேதி… நேற்று முன்தினம்… அவனது அப்பா ஸ்ரீனிவாச ராகவனும், அம்மா ஜானகி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள்.

ஸ்ரீனிவாசராகவன், கல்கி குழுமத்தில் இருந்து வெளியாகும் “தீபம்” ஆன்மிக இதழின் பொறுப்பாசிரியர். ஜானகி . மாலை நேரத்தில் வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்திவந்தார். அவர்களுக்கு அனிருத் ஒரே மகன். நான்காம் வகுப்பு படிக்கிறான்.

சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகர் காமராஜர் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு.

இருவரும் சம்பாதிக்கிறார்கள். ஒரே மகன். சொந்த வீடு.. என்ன பிரச்சினை இவர்களுக்கு..?

நான்காம் வகுப்பு படிக்கும் சிறு பிள்ளையை தவிக்க விட்டு தற்கொலை செய்துகொள்ளும்படியாக என்னதான் நடந்தது?

ஸ்ரீனிவாசராகவனின் உறவினர்கள் மற்றும் அவருக்கு அறிமுகமானவர்களிடம் பேசினோம்.

கிடைத்த தகவல்கள் இதுதான்: (இறந்தவர்களை விமர்சிக்க வேண்டும் என்பது நம் நோக்கம் அல்ல.. இனி இப்படிப்பட்ட இறப்புகள் நடக்கக்கூடாது என்கிற நோக்கத்தில் வெளியிடுகிறோம்.)

ஸ்ரீனிவாச ராகவன் தான் வசித்த அடுக்குமாடி வீட்டை தவணை முறையில் வாங்கியிருக்கிறார். தனது வருமானத்துக்கு மீறிய தவணை. கூடுதலாக சில பணிகளைச் செய்து, தவணையை செலுத்திவிடலாம் என்று நம்பியிருக்கிறார். நம்பிக்கை பொய்த்துவிட்டது. இதையடுத்து பணப்பிரச்சினை ஏற்படு, அது மனைவியுடனான மனப்பிரச்சினையாக மாறியிருக்கிறது. சம்பவத்தன்றும் தம்பதியிருக்குள் வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஆத்திரத்தில் மனைவி ஜானகி தற்கொலை செய்துகொள்ள, ஸ்ரீனவாசராகவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இவர்களது மரணங்கள் நமக்கு உணர்த்தும் சேதிகள் நிறைய.

முதல் விஷயம்.. வருமானத்துக்கு ஏற்ப திட்டமிடாமல் தனது கனவுகளை நிஜமாக்க முயன்றது.  வருமானத்திற்குள் அடங்கும்படியான தவணையில் வீடு வாங்கியிருக்கலாம் ஸ்ரீனிவாச ராகவன். அகலக்கால் வைத்தது பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்த விஷயம்.. வருமானத்துக்கு மீறிய செயலில் கணவன் ஈடுபட்டால், புத்தி சொல்லி தடுக்கவேண்டியது மனைவிதான். அதுதான் மதியூக மந்திரிக்கு அழகு. ஆனால் ஸ்ரீனிவாச ராகவனின் மனைவி ஜானகியும், வருமானத்துக்கு மீறிய ஆசைகள் கொண்டவராக இருந்திருக்கிறார். இதையடுத்துதான் புதிய வீடு, அதிக தவணை, அவஸ்தை எல்லாம் வந்திருக்கிறது.

பணப்பிரச்சினை ஏற்பட்டவுடன், கணவரிடம் தனது ஆதங்கத்தை ஆத்திரமாக வெளிப்படுத்துவது அவரது வழக்கமாக இருந்திருக்கிறது. இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு நடப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.

மிகுந்த உணர்ச்சிவசப்படுபவராகவும், சட்டென முடிவெடுக்கக்கூடியவராகவும் இருந்திருக்கிறார்கள் கணவன் மனைவி இருவருமே. அப்படித்தான் இந்த மரணத்தையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஸ்ரீனிவாசராகவன், அவ்வளவு எளிதில் யாருடனும் நெருங்கிப் பழகமாட்டாராம். பிறரது ஆலோசனைகளை எப்போதும் அவர் விரும்பியதில்லை.. அவர்தான் பலருக்கும் கவுன்சிலிங் கொடுப்பார் என்கிறார்கள். அவரது மனைவி ஜானகியும் அப்படித்தான் என்கிறார்கள்.

இப்போது இவர்களது மரணத்துக்கான காரணங்களை ஓரளவு உங்களாலும் யூகிக்க முடியும்.

ஆமாம்.. திட்டமிடாத செலவுகள், ஒருவேளை எதிர்பாராமல் அப்படி ஆகிவிட்டால் அதை ஈடுகட்டம் படியாக புதிய வருமானத்தை உருவாக்காமை, சரி ஆனது ஆகிவிட்டது.. வீட்டை விற்றிருக்கலாம். ஆனால் அதை அவமானமாக கருதியிருக்கிறார்கள், தம்பதியர்.

எல்லாவற்றுக்கும் மேலாக… மனம் விட்டு யாரிடமாவது பேசியிருந்தால்… தான் மட்டுமே அறிவாளி என்கிற எண்ணமின்றி, தனக்கான பிரச்சினை குறித்து நெருக்கமான யாரிடமாவது விவாதித்திருந்தால்.. இந்த மரணங்களை தவிர்த்திருக்கமுடியும்.

மற்றவரிடமிருந்து பண உதவி பெற வேண்டும் என்பதில்லை.. நமத சோகத்தை அடுத்தவரிடம் கூறும்போது மனது லேசாகும், அவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தைகளில், வாழ்வதற்கான நம்பிக்கை டானிக் இருக்கும்.

இதெல்லாம் இல்லாததுதான் இந்த துர்மரணங்களுக்குக் காரணம்.

இன்னொரு விசயத்தையும் அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

ஆணும் பெண்ணும் தனது விருப்பத்துக்காவே உறவு கொள்கிறார்கள். அது அவர்கள் விருப்பம், உரிமை. ஆனால் அந்த உறவின் மூலம் இன்னொரு உயிர் பிறந்தவுடன், தங்களுக்கான உரிமைகளை அவர்கள் இழக்கிறார்கள். ஆமாம்.. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, பிள்ளைகளுக்காக வாழ வேண்டும். அவர்களை ஆளாக்க வேண்டும்.

இந்த மனநிலை இல்லாவிட்டால் பிள்ளை பெற்றுக்கொள்ளக்கூடாது.

ஆமாம்… தாய் தந்தையரை இழந்து தவிக்கும் அந்த சிறுவனை பார்க்கும்போது இப்படித்தான் நமக்குத் தோன்றுகிறது.