ராதிகா

பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு ஆதரவு தராமல், நடிகர் சங்கம் ஏமாற்றிவிட்டது என்று ராதிகா கூறியதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தலைவர் நாசர், பொதுச்செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

அப்போது, “ பீப் பாடலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக சிம்புவிடம் தனிப்பட்ட முறையில் பேசினோம். சிம்பு தரப்பினரோ, தாங்களே சட்ட ரீதியாக பிரச்சினையை தீர்த்துக் கொள்கிறோம் என்றனர்.

இந்த பாடல் வெளியாகிவிட்டதால் மன்னிப்பு கேட்டுவிட்டால் பிரச்சனை முடிந்துவிடும்; அதன் பின்னர் நடிகர் சங்கம் இந்த விவகாரத்தை கையிலெடுத்து சுமுகமான தீர்வு காணலாம் என்று நினைத்தோம். அதை சிம்பு தரப்பினர் விரும்பவில்லை.

தவிர இந்த விசயம் இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இது இருக்கிறது. ஆகவே எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை.

உண்மை இப்படி இருக்க சிம்புவை, நடிகர் சங்கம் ஏமாற்றிவிட்டதாக நடிகை ராதிகா விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து அவரிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறோம்” என்றார்கள்.

மேலும், “சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று நிறைய கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அதுபற்றி செயற்குழுவில் பேசவில்லை; சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும் எண்ணமும் இல்லை” என்றும் அவர்கள் கூறினார்கள்.

ஆனால் ராதிகா விடுவதாக இல்லை.

தனது ட்விட்டர் பக்கத்தில், “நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்தபோது கமல்ஹாஸனை நடிகர் சங்கம் ஏன் ஆதரிக்கவில்லை?

கற்பழித்தவர்கள் சுதந்தரமாக வெளியே சுற்றுகிறார்கள். இந்த நிலையில் பீப் பாடல் பெரிய பிரச்சினையாக்கப்படுகிறது? நடிகர் சங்க நிர்வாகிகளே, ஒரு முடிவெடுங்கள். பாத்ரூமில் பாடுபவர்கள், செல்ஃபி எடுப்பவர்கள் என உங்களில் யாருக்கு வேண்டுமானால் இப்படி ஒரு பிரச்சினை வரலாம்!” என்று போட்டுத்தாக்கி இருக்கிறார்.