6

 

(பிரபாகரனும் நானும்: 5: பழ. நெடுமாறன்)

1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி….

மதுரை ஒய்.எம்.சி.ஏ மண்டபத்தில் நேதாஜியின் விழாவினை இந்தியத் தேசிய இரணுவத்தினர் கொண்டாடினார்கள். இந்த விழாவில் பேசுவதற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். பிரபாகரன் அவர்களும் என்னுடன் வந்தார்.

கூட்டத்தினரோடு ஒருபுறமாக அமர்ந்து கொண்டார் பிரபாகரன்.

முன் வரிசைகளில் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் அமர்ந்திருந்தனர். அநேகமாக எல்லோருமே முதியவர்கள். ஆனாலும் இந்தியத் தேசிய இராணுவத்தின் உடையை அணிந்து மிடுக்கோடு அவர்கள்  அமர்ந்திருந்த  காட்சி எல்லோரையும் கவர்ந்தது.  விழாவில் கலந்துகொள்ள நேதாஜியின் அமைச்சரவையில் இருந்தவரும் மகளிர் படையாளியின் தலைவியாக இருந்தவருமான கேப்டன் இலட்சுமி அவர்களும் வருகை தந்திருந்தார்

விழா தொடங்குவதற்கு முன்னால் கேப்டன் இலட்சுமியும் இந்திய தேசிய இராணுவ வீரர்களும் எழுந்து நின்று தங்களின் இராணுவ கீதத்தை உணர்ச்சிகரமாக பாடினார்கள். அப்போது கேப்டன் இலட்சுமி விழிகளில் நீர் பெருக்கெடுத்து  ஓடுவதை நான் பார்த்தேன் . அவருடைய பேச்சில் நேதாஜியைப் பற்றிக்  குறிப்பிடும் போதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதையும்  பார்த்தேன்.

நான் பேசியபோது “நேதாஜியின் வாழ்க்கையை பின்பற்றி விடுதலைப்புலிகள் ‘தமிழீழம்’ பெறுவதற்குப் போராடுகிறார்கள்” என்று கூறினேன்.

நெடுமாறன்

விழா முடிந்து திரும்பியபோது பிரபாகரன் என்னிடம், “’அண்ணா!  நீங்கள் சொன்னது உண்மைதான். நேதாஜிதான் எங்களுக்கு வழிகாட்டி.  அவர் வழியைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்’’ என்றார் உணர்ச்சிப்பெருக்குடன்.

அதைத் தொடர்ந்து இருவரும் நீண்டநேரம்  பேசிக்கொண்டிருந்தோம். அப்போது  நேதாஜியைப் பிரபாகரன் எந்த அளவுக்கு  நேசிக்கிறார் என்பது எனக்கு புலனாயிற்று. நேதாஜியைப் பற்றி அத்தனை பரவசத்துடன்  பேசினார்.

நேதாஜியைப் பற்றி நான் சேகரித்து வைத்திருந்த பல புத்தகங்களை அவருக்கு கொடுத்தபோது அவர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

மதுரையில் இருந்த போது பிரபாகரன் சும்மா இருக்கவில்லை.  தோழர்களுக்குப் பயிற்சி அளிபதிலும் எதிர்காலத் திட்டங்களை  வகுப்பதிலும் ஈடுபட்டார்.

தமது இயக்கத்துக்கு புலிச்சின்னத்தை மதுரையில்தான் தேர்ந்தெடுத்தார் பிரபாகரன். புலியை ஏன் தேர்ந்தெடுத்தார்?

(அது பற்றி  அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்..)