புதிய பகுதி: ஊடக குரல் : “புதிய தலைமுறை” வேங்கடபிரகாஷ் பேட்டி தொடர்ச்சி..
b
நடுநிலை என்று ஒன்று கிடையாது. அநியாயம் செய்தவரையும், பாதிக்கப்பட்டவரையும் சமமாகவைத்து, வாய்ப்பு கொடுக்கும் இந்த நடுநிலை அநீதியே என்று ஒரு கருத்து உண்டு. உங்கள் கருத்து? 
இது செய்தியைப் பொறுத்து மாறுபடும். இரு கட்சிகளை விமர்சித்தால் நடுவில் நிற்கலாம். ஒரு மூதாட்டியை ஒருவன் கொன்று நகையை எடுக்கிறானென்றால் அங்கு அவன் கொன்றதற்குப் பசி காரணமா? ருசி காரணமா? என்றெல்லாம் பார்ப்பதில்லை. கொலைகாரனுக்கு எதிராகத்தான் நிற்கிறோம். மற்றபடி பெரும்பாலான பிரச்னைகளில் நியாயமென்பது ஆளாளுக்கு மாறுபடும்போது முடிவெடுப்பதெப்படி? இரு தரப்பினருக்கும் கருத்துகளைச் சொல்ல முழு வாய்ப்பளிப்பதே நியாயம். அந்த நடுநிலை இருக்கத்தான் வேண்டும். ’நடுநிலை என்ற ஒன்றே கிடையாது நியாயத்தின் பக்கம் நிற்கும் ஒரு நிலைதான் உண்டுஎன்பது கேட்பதற்கு நன்றாக இருக்குமே தவிர நடைமுறைக்கு ஒத்துவராது. உண்மைக்குப் பல பக்கங்கள் உண்டு. அனைத்துமே உண்மைதான். நான் சொல்வது மட்டுந்தான் உண்மை எனும் நிலையெடுப்பது தவறாக முடியும். நடுநிலையோடு ஒன்றை அணுக இதய சுத்தி வேண்டும், பெரும்பக்குவம் கைவரப்பெறவேண்டும் என்று கருதுகிறேன். அதை நானும் பழகிக்கொண்டிருக்கிறேன். 
 24 மணி நேர செய்தி சேனல்கள், இணைய இதழ்கள் தேவையில்லை என்று ஒரு கருத்து உள்ளது. இவற்றால் தேவையற்றவை எல்லாம் செய்தி அந்தஸ்து பெறுகின்றன என்பதற்கு தங்கள் பதில்?
 செய்தித்தாள் தாயாக இருந்தது தொலைக்காட்சி பதினாறடி பாயும் குட்டியாகப் பிறந்தது. தொலைக்காட்சியும் தாய்மைப் பருவத்தை அடைவதும் பிற வடிவங்கள் பிறப்பதும் காலம் கணக்கிட்டுச் செய்யும் பண்டுவம். ஏற்கத்தான் வேண்டும். தாகம் தீர்ப்பதெல்லாம் காக்கப்படும். தேவையற்றவையெல்லாம் காணாமற்போகும். செய்தி மதிப்பு என்பதெல்லாம் தனிமனிதர்களைப் பொறுத்ததுதானே! என் வீட்டுத் துயரமோ மகிழ்ச்சியோ எனக்குப் பெரிதுதானே. ஆனால் அவையெல்லாம் பொருத்தமான இடங்களில் மட்டும் வருவதாக நெறிப்படுத்தலாம். முக்கியச் செய்திகளென்றால் அவற்றில் அனைவரையும் தொடும் செய்திகள் மட்டுமே இருக்கவேண்டும். 
அச்சிதழ்களைவிட, தொ.கா. ஊடகம்தான் சிறப்பானதா? 
ஒன்றைச் செய்துபாருங்கள். ஒரு வரவேற்பறையில் ஒரு செய்தித்தாளும் ஒரு புகைப்படத் தொகுப்பும் இருந்தால் முதலில் கைகள் புகைப்படத் தொகுப்பைத்தான் தொடுகின்றன. இரண்டுமிருந்து தொலைக்காட்சியில் சுவையான காட்சி ஓடிக்கொண்டிருந்தால் இரண்டையும் விட்டுவிட்டு அதைப் பார்த்தவாறே அமர்ந்திருப்போம். இது மனித இயல்பு. அச்சிதழை எடுத்து ஊன்றிப்படிக்கும் நேரத்தில் அதே செய்தியைக் காட்சிகளுடன் ஊடகம் காட்டிவிடுவதால் ஈர்ப்பதில் அது முன்னிற்கிறது. அச்சிதழில் ஒன்று புரியவில்லையென்றாலும் மீண்டும் மீண்டும் படித்து மனதிலிறுத்திக்கொள்ளலாம். தொலைக்காட்சியில் மீண்டும் அது வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆனால் இப்போதோ ஒரு கைப்பேசியிலேயே அச்சிதழுமிருக்கிறது. தொலைக்காட்சியுமிருக்கிறது. வேண்டும்போது மீண்டும் மீண்டும் ஓடவிட்டுப் பார்த்துக்கொள்ளும் வசதியுமிருக்கிறது. எல்லாம் உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிட்ட நிலையில் அனைத்துமே தேவைதான் சிறப்புதான்.
 பெரும்பாலும் நிகழ்ச்சி நெறியாளர்கள் சிகப்பாகவே இருக்கிறார்களேகறுப்பு என்றால் தாழ்வானது என்ற எண்ணம் ஊடகத்திலும் இருக்கிறதா? 
உழவரெல்லாம் கறுப்பாயிருக்க உண்பவரெல்லாம் சிவப்பாயிருக்கிறோம். 
இப்படிக் கேளுங்கள்ஏன் அனைத்து நெறியாளர்களுக்கும் சிவப்பாகவே ஒப்பனை போடுகிறார்கள்? என்று! 
தரமிருந்தால் போதும். நிறமெதற்கு?
பொதிகையில் எங்களையெல்லாம் வேலைக்கு எடுத்தபோது எங்கள் தலைவர் திரு.ஜோசஃப் சந்திரகுமார் விளையாட்டாகச் சொன்னது இன்னும் மனதிலிருக்கிறது. ‘’ ஏன் உங்களையெல்லாம் அதாவது சுமாராக இருப்பவர்களையெல்லாம் எடுத்திருக்கிறோம் தெரியுமா?! அப்போதுதான் மக்கள் செய்தியைக் கவனிப்பார்கள். இல்லையென்றால் செய்தியை முந்திக்கொண்டு நீங்கள்தான் தெரிவீர்கள்! ‘’ என்றார்.
a
உண்மைதான். நாளாவட்டத்தில் செய்தியாளர்கள் தங்களைத் திரைப் பிரபலங்களைப்போல் நினைத்துக்கொள்வதும் பொதுவெளியில் அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் போல் தங்களுக்கும் கிடைக்கவேண்டுமென்று எண்ணிக்கொள்வதும் பரிதாபமாயிருக்கிறது. அண்மையில் ஓர் உணவகத்தில் பரிமாறுபவர் கேட்டார் ‘’பந்தாவே இல்லாம இருக்கீங்களே சார்’’ என்றார். கண்ணீர் வந்துவிட்டது. எவ்வளவு பேரைப் பார்த்திருக்கிறாரோ அப்படி?! ஒரு மனிதன் எதற்காகப் பந்தாவாக அதாவது மாண்பு குலைந்தவனாக இருக்க வேண்டும்?!
 உங்கள் எதிர்கால லட்சியம்..? 
மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துகொள்ளக்கூடிய இளந்தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கவேண்டுமென்பதே எப்போதுமுள்ள இலட்சியம். வாழுங்காலத்திற்குள்ளேயே நலமடைந்த தமிழகத்திலும் சில காலம் வாழ்ந்த பின்னே மடியவேண்டுமென்ற பேராசையும் உண்டு.
வளரும் இதழாளர்களுக்கு உங்களது அறிவுரை, வழிகாட்டல்கள் என்ன..? 
புதிய தலைமுறைக்கு வரும்வரை அதிகம் அறியப்படாதவனாகத்தான் இருந்தேன். உழைப்பே நம்மை வெளிச்சமிட்டுக் காட்டும். அதேவேளையில் ஊடகவியலாளர்கள் எப்போதும் நினைவிலிருத்தவேண்டியதுஇத்துறை அடுத்த தலைமுறை நிம்மதிப்பெருமூச்சுவிட உழைக்கும் துறை. நமக்கு வெளிச்சம் கிடைக்கிறதென்பதற்காக உள்ளே நுழைதல் கூடாது. இருளிலிருப்போரை வெளிச்சத்திற்குக் கொண்டுவர உழைப்பதற்காக வரவேண்டும். அப்படி வருவோர்க்கு வாழ்த்துகள். வரம்பற்ற வெற்றிக்குக் கரம்பற்றக் காத்திருக்கிறேன்.
– டி.வி.எஸ் சோமு