துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக, பலியானவர்கள் எண்ணிக்கை இந்திய நேரப்படி இன்று மாலை 4மணி அளவில் 5102 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள பிரபல  கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் வீரர்கள் பலரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இந்திய மீட்புபணி வீரர்கள் மற்றும்  நிவாரணப் பொருட்கள் அங்கு சென்றடைந்துள்ள நிலையில், அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்தவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

துருக்கி, சிரியா நாடுகளில் நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க சோகம்  இன்று 2–வது நாளும் தொடர்ந்து வருகிறது. இதன் பாதிப்பு அருகே உள்ள நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை (செவ்வாய்) மத்திய துருக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (5.8 ரிக்டர் அளவில்) மக்களை இன்னும் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அடுத்தடுத்து ஏற்பட்ட மிகவும் கடுமையான 3 நிலநடுக்கங்களால் 2 நாடுகளிலும் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5ஆயிரத்தை கடந்துள்ளது. ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கி உள்ளதால், அதனுள் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் துருக்கி ராணுவத்துடன் இணைந்து பல நாட்டு வீரர்களும் களமிறங்கி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக,  பாரம்பரியமிக்க புராதன கட்டிடங்கள் வரலாற்று சிறப்பு மிக்க அலெப்போ கோட்டை உள்ளிட்ட பழங்கால கோட்டைகள் இடிந்து தரைமட்டமானது.

பூகம்பத்தால் அங்குள்ள பல அடுக்குமாடி கட்டிங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து கிடக்கின்றன. வீதி எங்கும் கட்டிட இடிபாடுகள் குவிந்துள்ளன.  திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்து தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமானது. இதில் நூற்றுக்கணக்கானவர் உயிர் இழந்தனர்.  உலக சுகாதார அமைப்பு இருநாடுகளிலும் சேர்த்து பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடக்கலாம் என அஞ்சுவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து துருக்கி சுகாதார அமைச்சர் ஃபரத்தீன் கோக்கோ கூறுகையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பூகம்பத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் மீட்புப் படைகளுக்கு அது சவாலாக உள்ளது’ என்றார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துருக்கி நாட்டின் துணை அதிபர் ஃபுவாட் ஓக்டே , “இதுபோன்ற பேரிடர் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இந்தப் பூகம்பத்தில் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதை எதிர்கொள்ளவும் நாங்கள் மனதளவில் தயாராகி வருகிறோம். நேற்று (பிப்.6) காலை ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து இதுவரை 145 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 3 அதிர்வுகள் 6.0 ரிக்டருக்கும் அதிகமானவை” என்றார்.

இந்த நிலநடுக்கம் காரணமாக,  மத்திய துருக்கி பகுதியில் சிறையில் இருந்த 20 பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபோல,  பிரபல கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் முன்னாள் முன்னணி வீரர் கானாவை சேர்ந்த கிறிஸ்டியன் அட்சு ,  மேலும் கிளம் இயக்குநர் டானர் சவூத்தையும் காணவில்லை என ஹடேஸ்போர் கிளப்பின் செய்தி தொடரபாளர் முஸ்தபா ஓசத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாததால் இவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றார்.

இதற்கிடையில் துருக்கிக்கு உதவ முன்வந்துள்ள இந்திய அரசு, முதல்கட்டமாக தேடல் மற்றும் மீட்புப் பணியாளர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள், துளையிடும் இயந்திரங்கள், நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற தேவையான உபகரணங்களுடன் இந்திய C17 விமானம் துருக்கியை சென்று அடைந்துள்ளது. விமானத்தில் உள்ள நிவாரண பொருட்கள் இறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையை துருக்கி அரசு மேற்கொள்ள இருப்பதாகவும், இந்திய மீட்பு வீரர்களை உடனே களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.