Tamil_News_405448555947

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெருமை மிகு திட்டம் என்று ஆளுங்கட்சியினரால் வர்ணிக்கப்படும் அம்மா உணவகங்களின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புகார் தெரிவிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 19ஆம் நாள் சென்னை-சாந்தோமில் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகத்தைத் தொடங்கிவைத்தார். அதே நாளில் சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 இடங்களில் மலிவு விலை உணவங்கள் செயல்பாட்டிற்கு வந்தன.

தொடர்ந்து நகரின் பல இடங்களிலும் துவக்கப்பட்ட அம்மா உணவகம்,, மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய் என்ற விலையில் கிடைப்பதால் ஏழை எளிய மக்கள் அம்மா உணவகத்தையே நாடுகிறார்கள்.

துவக்கப்பட்ட காலத்தில் இருந்து தரமான உணவே இங்கு வழங்கப்பட்டது. முதல்வரின் விருப்பமான திட்டம் என்பதால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்களும் அடிக்கடி அம்மா உணவகங்களுக்கு வந்து சோதனை நடத்தினர். அதிகாரிகளும் அடிக்கடி விசிட்செய்தனர்.

நாளடைவில் இவர்களது விசிட் குறைந்தது. இதையடுத்து உணவகத்தின் தரமும் குறைய ஆரம்பித்தது.

சமீபத்தில் தர்மபுரியில் இயங்கும் அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் குப்பை லாரியில் கொண்டுவரப்பட்ட செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

 

12115509_815204938592149_7911778274158540687_n

“உணவுப் பொருட்களை குப்பை லாரியில் கொண்டுவந்தால் நோய்கள் தாக்காதா” என்று பொது மக்கள் கேள்வி எழுப்பினர்.

இன்னொரு புறம் உணவின் தரமும் குறைந்துகொண்டே வருகிறது. பெரும்பாலான அம்மா உணவகங்களில் காலையில் வழங்கப்படும் இட்லி, அளவு சிறுத்துவிட்டதோடு அழுத்தமாக உள்ளது. தரமற்ற அரிசியை பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள்.   இட்லிக்கு வழங்கப்படும் சாம்பாரிலும் பருப்பு அளவு குறைந்து மிளகாய்த்தண்ணீர் போல் இருப்பதாக கூறுகிறார்கள்.

மதியம் வழங்கப்படும் சாம்பார் சாதத்தின் தரமும் மோசமாக இருக்கிறது. தரமற்ற அரசி, குறைவான பருப்பு ஆகியவற்றால் குண்டு குண்டான சோற்றுப் பருக்கை தனியாகவும், சாம்பார் தனியாகவும் கிடக்கிறது. (படம்)

12004036_769328793211333_1791302902348136720_n

 

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபேது, “உணவு தரமாகத்தான் உள்ளது” என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டார்கள்.

ஏழை எளிய மக்களுக்கு உதவும் அம்மா உணவகத்தின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.