Waris Ahluwalia
நியூயார்க்:
சீக்கிய நடிகரான வாரிஸ் அலுவாலியா கடந்த திங்கள் கிழமை மெக்சிகோவில் இருந்து நியூயார்க் வருவதற்காக விமானநிலையம் சென்றார். ஏரோ மெக்சிகோ விமான நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவாலியா அணிந்திருந்த டர்பனை அவிழ்க்கும்படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கு அலுவாலியா மறுப்பு தெரிவித்தார். இதனால் அவரது அன்றைய பயணம் தடை பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராமில் இது குறித்து பகிர்ந்த அலுவாலியா‘‘ நான் டர்பனை அவிழ்க்க மறுத்ததால் குறிப்பிட்ட அந்த விமானத்தில் பயணம் செய்ய முடியவில்லை. அடுத்த விமானத்தில் டிக்கெட் வழங்க விமான நிறுவனத்தினர் முன் வந்தனர்.
ஆனால், சீக்கிய பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விமான நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் வரை மெக்சிகோவில் இருந்து வெளியேற மாட்டேன் என்று மறுத்தேன்.
இதன் பின்னர் கடந்த செவ்வாய் கிழமை விமான நிறுவனம் அலுவாலியாவிடம் மன்னிப்பு கேட்டது. தங்களது சோதனை முறையை மாற்றிக் கொள்வதாக அவர்கள் தெரிவித்த பின்னரே நியூயார்க் புறப்பட்டு வந்தேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
நியூயார்க் வந்த பிறகு இன்ஸ்டாகிராமில் அலுவாலியா கூறுகையில், ‘‘மதம் மற்றும் கலாச்சார சகிப்புத்தன்மையை ஏற்றுக் கொண்டதற்காக ஏரோ மெக்சிகோ நிறுவனத்துக்கு நன்றி. நல்ல தீர்வு ஏற்பட்ட பிறகு நாம் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி’’ என தெரிவித்துள்ளார்.
விமான நிறுவன வக்கீல்களுக்கும், சீக்கிய மத அமைப்புக்கும் இடையே நியூயார்கில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை. எனினும், வாடிக்கையாளரின் கலாச்சாரம், மத நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது குறித்து பாதுகாப்பு சோதனையில் கவனம் செலுத்தப்படும் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.