ottagam1

வுதியில் வேலைக்குச் சென்ற 23 தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை நிறுத்தம் செய்யப்பட்டு நிர்வாகத்தால் சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்தியை சில நாட்களுக்கு முன் ungalpathrikai.com  இதழில் வெளியிட்டோம்.

இப்போது இதே போன்ற நிலையில் இருக்கும் இளைஞர் ஒருவரின் வீடியோ  இணையத்தில் உலவ ஆரம்பித்திருக்கிறது. அந்த இளைஞர் பேசுவதை கேட்கும்போதே பரிதாபமாக இருக்கிறது. உயிருக்கு பயந்து பேசும் அந்த இளைஞர், “டிரைவர் வேலை என்று சொல்லி அழைத்து வந்து ஒட்டகம் மேய்க்க விட்டுவிட்டார்கள்.  கேட்டால் அடித்து உதைக்கிறார்கள், கொன்றுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. என்னைப்போல தமிழகத்திலிருந்து வந்து எத்தனை பேர் தவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழக அரசுதான் தலையிட்டு காப்பாற்ற வேண்டும்”என்று  பயந்து பயந்து பேசுகிறார் அந்த இளைஞர்.

பரந்த வெட்ட வெளியில் ஒட்டங்கள் மேயும் நிலையில் அந்த இளைஞர் பயந்து பயந்து பேசுகிறார். அவர் பேசுவதாவது:

“வணக்கமுங்க.. நான் தேனி மாவட்டம் கம்பம் பகுதிய சேர்ந்தவனுங்க.. என்கிட்ட ஒரு லட்ச ரூபா வாங்கிகிட்டு,  குவைத்துல டிரைவர் வேலைனு அழைச்சுகிட்டு வந்தாங்க.  ஆனா  ஈராக் எல்லையோரத்துல குவைத் பகுதியில ஒரு அரபிகிட்ட வித்துட்டு போயிட்டாங்க.

“நான் ஒட்டகம் மேய்க்க வரல.. டிரைவர் வேலைனுதான் வந்தேன்” அப்படின்னு சொன்னா இங்க இருக்கிற அரபிங்க மாறி மாறி அடிக்கிறாங்க. சாப்பாடும் போடறதில்ல… செத்துருவேன் போலிருக்கு.. இன்னும் என்னை மாதிரி எத்தனை  தமிழருங்க இங்க தவிக்கிறாங்கன்னு தெரியல… தமிழக அரசுதான் தலையிட்டு காப்பாத்தணும்..” என்று கண்களில் மரண பயத்துடன் பேசுகிறார் அந்த இளைஞர்.

டிரைவர் வேலைக்கு என்று சொல்லி ஒரு லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு தன்னை அரபியிடம் விற்றவர்கள்  ஹாஜா, யாகூப் ஆகிய இருவர் என்றும் சொல்கிறார்.

கம்பம் பகுதியில் வெளிநாட்டுக்கு ஆள் எடுக்கும் ஏஜண்ட்டாகததான் இந்த ஹாஜா மற்றும் யாகூப் இருக்கக்கூடும். ஆகவே தமிழக அரசு உடனடியாக  இந்த விசயத்தில் தலையிட்டு அந்த இருவரையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் மூலமாகவும், மற்ற ஏஜெண்டுகள் மூலமாகவும் அரபு நாட்டுக்கு வேலைக்கு என்று  உ.யிருக்கு உத்திரவாதம் இன்றி தவிக்கும் தமிழக இளைஞர்களை மீட்டவும் ஆவண செய்ய வேண்டும்.