balan

சென்னை:

மிழகத்த்தில், இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் பற்றிய புத்தகம் நாளை மறுநாள் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2009ம் ஆண்டு  இலங்கையில் நடந்த போரின்போது அந்நாட்டு அரசு புரிந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக  அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய  அரசுக்கு அனுப்பி உள்ளது. இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும்  ஆதரித்துள்ளன. பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் இத் தீர்மானத்தை கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், “ஏற்கெனவே இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என்ற தீர்மானத்தையே மத்திய அரசு பொருட்படுத்தாத நிலையில், இன்னொரு தீர்மானத்தால் என்ன பயன்? அதற்கு பதிலாக தன்னால் முடிந்த செயலான, தமிழகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்துவைத்திருக்கும் தமிழக அரசு அவர்களை விடுவிக்கலாமே. மற்ற அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தலாமே” என்ற குரல் எழுந்திருக்கிறது.

இதற்கிடையே எந்தவித குற்றச்சாட்டும் இன்றி சிறப்பு முகாமில் பலர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும், அவவர்களில் சிலர் மனம் வெறுத்து தற்கொலை முயற்சியியல் ஈடுபடுவதும் தொடர்கிறது.

இந்த நிலையில் நாளை மறுநாள் (21ம் தேதி)  சென்னை  உயர்நீதிமன்றம் எதிரே உள்ள ஒய்.எம். சி.ஏ. அரங்கத்தில் “சிறப்பு முகாம் என்னும் சித்திரவைதை முகாம்” என்ற புத்தகம் வெளியாக இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கெனே சிறப்பு முகாமில் இருந்து பெரும் சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு  நாடு கடத்தப்பட்ட தோழர். பாலன் என்பவர் இந்த நூலை எழுதி இருப்பதும், நூல் வெளியீட்டு விழாவுக்கு அவர் இந்தியா வர விசா மறுக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நூல் வெளியீட்டு விழாவை தமிழ்தேச மக்கள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதன் தலைவர் வழக்கறிஞர் பா.புகழேந்தி இந்த நூலில் எழுதியிருக்கும் அணிந்துரையிலிருந்தே, சிறப்பு முகாம் வாசிகளின் அவல நிலையை அறிந்துகொள்ள முடியும்.

அந்த அணிந்துரையில் இருந்து..…

“பொதுவாக  வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு தமிழக சிறையில் அடைக்கப்பட்டால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் சிறைக்கு வந்து அவர்களை சந்தித்து , தேவையான பொருள் மற்றும் சட்ட உதவிகளைச் செய்கிறார்கள் . ஆனால் ஈழத் தமிழர்கள் நாடற்றவர்களாய் ஆக்கப்பட்டுள்ளதால் அவர்களைப் பார்க்க சிறையிலும் முகாமிலும் யாரும் வருவதில்லை . அவர்கள் குடும்பங்களையும் உறவுகளையும் பிரிந்து நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் , அவர்களில் பலர் மனநோயாளியாக மாறியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள மற்ற நாட்டு அகதிகள் இங்கு சுதந்திரமாக உலவுகிறார்கள். தொழில் செய்கிறார்கள.; அவர்களில் யாரும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதில்லை.

போதைபொருள், கள்ளநோட்டுக்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் கூட பிணையில் வெளியே வந்து சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் பிணையில் வந்தாலும் குற்ற வழக்கே இல்லை என்றாலும் அவர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்படுகின்றனர். எத்தனை ஆண்டுகாலம் உள்ளே இருக்கவேண்டும் என்ற வரையறை கூட இல்லாமல் அடைத்துவைக்கப்படுகிறார்கள்.

நூல் ஆசிரியர் தோழர் பாலன் குறிப்பிட்டுள்ளதைப்போல தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு இலங்கைக்குச் சென்று திரும்பி வந்து தங்கள் உறவுகளுடன் தமிழகத்தில் வசிப்பவர்களைக்கூட வெளிநாட்டினர் என சிறப்பு முகாமில் பலர் அடைக்கப்பட்டனர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிமுகாமில் வசிப்பவர்கள் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் குற்றப் பரம்பரையினரைப்போல நடத்தப்படுகின்றனர். முகாம் அதிகாரிகளும் கியூ காவல்துறையினரும் சேர்ந்து கொண்டு முகாம் பதிவை ரத்து செய்வது, தொலைதூர முகாமிற்கு மாற்றிவிடுவது என மிரட்டிச் செய்கிற அட்டூழியங்கள் சொல்லமுடியாதவை.

வெளிமுகாமில் நடைபிணமாய் வாழ்வதைவிட ஏதேனும் வெளிநாட்டிற்கு தப்பி போய்விடலாம் என்ற சிந்தனை எல்லோரிடமும் உள்ளது. ஆனால் அதற்கான பொருளாதார வசதி இல்லை. எனினும் பலர் கூட்டாக பணம் சேர்த்து வெளிநாட்டிற்கு தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள், சிலர் மாட்டிக் கொள்கிறார்கள். ஏன் வெளிமுகாமில் இருந்து உயிரை பணயம் வைத்து தப்பியோட முயல்கிறார்கள் என்பதை யாரும் பார்ப்பது கிடையாது.

வெளிநாட்டில் அகதியாய் சென்றால் குறிப்பிட்ட காலத்தில் குடியுரிமை வழங்கப்படுகிறது. அந்த நாட்டுக் குடிமகனைப்போல படிக்கலாம், வேலைசெய்யலாம், தொழில் தொடங்கலாம் என எல்லா சுதந்திரமும் உண்டு. ஆனால் தமிழகத்தில் 30 ஆண்டுகளாக அகதிகளாக இருப்பவர்கள் கூட தங்களது பெயரில் இருசக்கர வாகனம் கூட வாங்க முடியாது. உரிய கல்வி இல்லை, வேலைவாய்ப்பு இல்லை. அகதி என்ற பட்டத்தோடு வாழவேண்டும். முகாமை விட்டு வெளியேவர அதிகாரிகள் அனுமதி தேவை. தங்களின் அடிப்படை வசதியை கேட்டுப் போராடக்கூட உரிமை இல்லை.

சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் தங்களது வழக்கை விரைவாக நடத்த வேண்டும், தங்களை வெளிமுகாமிற்கு மாற்றவேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 2010 ல் இதே கோரிக்கைக்காக செங்கல்பட்டு முகாமில் உண்ணாவிரதம் இருந்தவர்கள்மீது காவல்துறை தாக்கியதில் 15க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுங்காயம் ஏற்பட்டது. காவல்துறையினர் தாக்கியதோடு காயம் பட்டவர்கள் மீதே வழக்குப்போட்டு சிறையில் அடைத்துவிட்டனர்.

இதே கோரிக்கைகாக சிறப்பு முகாம்களில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குகள் பல போடப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும் என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தும் இதுவரை நிலைமை மாறவில்லை.

இலங்கையில் சிங்கள அரசின் கீழ் உள்ள முகாம்களைவிட மிகவும் கொடுமையான முகாமாக தற்போது தமிழகத்தில் திருச்சி மற்றும் செய்யாறில் இயங்கும் இரண்டு சிறப்பு முகாம்கள்  தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்குவது  வேதனைக்குறியது.

நூல் ஆசிரியர் தோழர் பாலன் தமிழக சிறப்புமுகாம்களில் வாழ்ந்து அந்த துன்பத்தை அனுபவித்தவர். இந்த புத்தகம் தமிழகத்தில் உள்ள சிறப்புமுகாம்கள் பற்றிய கொடுமைகளை உலகின் பார்வைக்கு கொண்டுவரும் ஒரு விளக்காக இருக்கும் என்று நம்புகிறேன்”

– இவ்வாறு நூலின் அணிந்துரையில் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.