tsunami_2075046b

சுற்றுலா என்றால் பொதுவாக என்ன நினைப்பீர்கள்? பிரமிக்கவைக்கும் இயற்கைக் காட்சிகள், மனதைக் கவரும் விலங்கினங்கள், பறவைகள், கண்காட்சிகள், கட்டிடங்கள் இப்படித்தானே.

ஆனால் மிரளவைக்கும், சோகத்தில் ஆழ்த்தும், பதறவைக்கும் சுற்றுலா வகை ஒன்றும் உண்டு –  Dark Tourism என்கின்றனர்.

பேரிடர்கள், படுகொலைகள், சொல்லொணாக் கொடுமைகள் நிகழ்ந்த இடங்களை சுற்றிப்பார்ப்பதே Dark Tourism..

ஜப்பான் என்றால் பொதுவாக கெய்ஷா, புனிதத் தலங்கள் சுஷி முதலிய சிறப்பு உணவு வகைகள் பரிமாறப்படும் ஹோட்டல்கள், இவையே நினைவுக்கு வரும்.

ஆனால் அணுகுண்டு போடப்பட்ட ஹிரோஷிமா நாகசாகி, அண்மையில் பெரும் விபத்தை சந்தித்த ஃபுகுஷிமா அணு உலை, இரண்டாம் உலகப் போரில் நாசமான இடங்கள் இப்படிப்பட்டவற்றை சென்று பார்க்கவும் பலர் விரும்புகின்றனராம். அவர்களுக்கெனவே இருண்ட சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. இப்போது அது தொடர்பான இதழ் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

தொழுநோயாளிகள் மட்டுமே வாழும் ஒரு தீவு பற்றிய சிறப்புக் கட்டுரை ஒன்று முதல் இதழில் இடம்பெற்றிருக்கிறது.

பெரும் சுனாமியால் தாக்கப்பட்டு 70,000 மரங்கள் தழைத்த ரிகுசெண்டகடா காட்டில் எஞ்சி இருக்கும் ஒரே ஒரு பைன் மரம் பார்ப்போர் நெஞ்சங்களை உலுக்கிவிடும் என்றும் அந்த இதழ் சுட்டிக்காட்டுகிறது.

ஃபுகுஷிமா அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றுலாத்தலமாக மாற்றவேண்டும் என இன்னொரு கட்டுரை கூறுகிறது.

பேராசிரியர் அகிரா ஐடே, “நீண்ட காலமாகவே,  அணுகுண்டு உள்ளிட்ட பேரிடர்களை ஜப்பான் சந்தித்து வந்திருக்கிறது. அந்த இடங்களுக்கு சென்று வரும்போதுதான் வரலாறும் புரியும்,  எப்படி மனிதன் அழிவிலிருந்து மீள்கிறான் என்பதும் தெரியவரும்” என்கிறார்.

அதே போல் பயங்கர இனப்படுகொலை சந்தித்த ருவாண்டாவிற்கும் அதிக எண்ணிக்கையில் பயணிகள் செல்கின்றனர்.

நாமும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. கோத்ரா துவங்கி ஜெ உடன்பிறவா சகோதரி சகிதம் விஜயம் செய்து பலருக்கு உடனடி மோட்சம் வாங்கிக்கொடுத்த மஹாமஹத் தலம், தொடர்ந்து நெரிசல்களில் பக்தர்கள் பலியாகும் ஆலயங்கள், இலவச வேட்டி சேலை வாங்க அடித்து மோதி உயிரிழந்த இடங்கள், பலமாடிக் கட்டிடம் போரூரருகே இடிந்து விழுந்ததே இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னமும் பலவும் நிகழுமே.

எனவே இருண்ட சுற்றுலாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதால், அதனால் அன்னியச் செலாவணியும் ஈட்டமுடியும் என்பதால் மோடி அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

த.நா.கோபாலன்