கல்யாண்ராமன்
சென்னை:
ஃபேஸ்புக்கில் நாத்திகர்கள், திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கல்யாண்ராமன் இன்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

jawahirulla
எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா

பா.ஜ.க.வைச் சேர்ந்த கல்யாண்ராமன் என்பவர், டி.வி. விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அந்த விவாதங்களின் போது பல முறை அவதூறாக பேசியிருக்கிறார். அதே போல, தனது பேஸ்புக் பக்கத்திலும் எழுதி வந்தார்.
இதையடுத்து, மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா காவல்துறையில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்று கல்யாண்ராமன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். .
இது குறித்து ஜவாஹிருல்லாவை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “விமர்சனங்களை எப்போதும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அவை நாகரீகமாக இருக்க வேண்டும். இந்த கல்யாணராமன் என்பவர், தீவிர இந்துத்துவா பிரமுகர். மாற்று மதத்தினரை மிகவும் கொச்சைப்படுத்தி கருத்திடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
கடந்த டிசம்பர் 26 மாலை 6.01 மணிக்கு அவரது முகநூலில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை தொடர்புபடுத்தி ஒரு அவதூறு பதிவை எழுதியிருந்தார். இதனை சுட்டிக் காட்டி காவல் துறையில் புகார் அளித்தோம்.
புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல்துறை அதன் அடிப்படையில் சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை பதிவுச் செய்து இன்று அதிகாலை கல்யாண் ராமனை கைது செய்து அவரை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளது” என்றார் ஜிவாஹிருல்லா.
கடந்த ஹஜ் புனித யாத்திரையின் போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் முகநூலில் அது குறித்து வெறுப்பு பிரச்சாரப் பதிவிட்டார். இது குறித்து திருமங்கலம் தமுமுக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இப்போது மனிதநேய மக்கள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் கல்யாண்ராமன் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
முகநூலில் வெறுப்பு பிரச்சாரத்திற்கு இடம் இல்லை என்பதை உணர்த்திய தமிழக காவல்துறைக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முகநூலில் வெறுப்பு பிரச்சாரம் செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா பதிவிட்டுள்ளார்