missing

 

உரல் இல்லை , உலக்கையில்லை

ஊரெங்கு தேடினும் அம்மியில்லை

அதிலிருந்த குழவி இல்லை அழகுமிகு

ஆட்டுக்கல் காணவில்லை அந்நாளின்

பாக்குவெட்டி ,பானைச்சட்டி பழம்பெருமை

பாத்திரங்கள் போனதெங்கே பாராய் தம்பி

தாழைமடல் குடையில்லை தங்க நகை

தரத்தினிலே நிறைவில்லை தாயவளோ

மம்மி என மாறிவிட்டாள் தந்தையினை

மாற்றி அதை டாடி என சொல்லலாமோ

தந்திமுறை போனதுவே நானறிந்த

தட்டச்சு எந்திரங்கள் தறிகெட்டு போய்

அச்சு கோர்த்த அச்சகங்கள் அருகினவே

மிச்சம் மீதி ஒன்றிரண்டே மேதினியில்

ஏர்கலப்பை மாட்டுழவு ,இயற்கையுரம்

எங்கேயும் பார்த்ததுண்டா இல்லையில்லை

சீர்மேவும் சேலையது சென்றதெங்கே

பார்போற்றும் தமிழினிமை காணவில்லை

பரவிவரும் பிறமொழிகள் கலப்படத்தால்

பைந்தமிழும் மெல்லயினி மறைந்திடுமோ

யார் இதனைக்கண்ணுற்று என் செய்வர்

இடியாப்பம் ,இட்டலியும் இனியுண்டோ

நொடிப்பொழுது சமையலென நூறுவகை

படிப்படியாய் குடிபுகவே பார்த்திடுதே

இடி,மின்னல்,மழை போல நோய் நொடிகள்

எளிதாகப் பரவிடுதே நியாயம் தானா

காவிரிநீர் வரத்து கனவாகிப்போயிடுமா

கழனிகளில் பயிர் செய்தல் குறைந்ததாலே

கையேந்தும் நிலை வருமோ உணவுக்காக

விவசாய நிலமெல்லாம் மெல்ல மெல்ல

வீ ட்டுமனை ஆனதாலே விளச்சலில்லை

மதுப்பழக்கம் மலிந்தது காண் மனதிலொரு

மதவெறியும் மிகுந்ததுவே மண்ணிலெங்கும்

அரசியலில் காழ்ப்புணர்ச்சி அடக்குமுறை

அநியாயம் பெருகியதே அதனைமாற்ற

கட்டபொம்மன் போலோருவன் அந்த

கயத்தாற்றில் தோன்றிடினும் நமதருமை

பாரதி போல் ஒருவன் பாரினிலே பிறந்தாலும்

வள்ளுவனே இந்த வையகத்தே வந்திடினும்

வாழவழி பிறந்திடுமா வளமேவ நலம்வருமா

தாழ்வு நிலை மாற தக்கவழி பிறந்திடுமா

உள்ளதெலாம் மறைந்த பின்னே நாமும் இன்று

ஒப்பாரி வைப்பதனால் ஒன்றும் பயனில்லை

ஊர்கூடி தேர் இழுத்தால் உருளும் சக்கரம்போல்

பாரோர் ஒன்றிணைந்தால் பாதையது தெரிந்திடுமே

உணவுக்கலப்படத்தை ஒருபோதும் செய்யாமல்

உள்ளதே போதுமென உள்ளத்தில் விதைத்திடுவோம்

முடியாத கவிதையிதை முடிப்பது நம்கையில்

முற்றுப்புள்ளியிட முன்வருக தோழர்களே

 

– பாவலர் தஞ்சை தர்மராசன்.