ஊடக குரல்: பகுதி 3

கருணா
கருணா

மறக்க முடியாத பேட்டிகள்…
2008 நவம்பரில் முதன் முறையாக நடேசனை இ மெயில் மூலமாக பேட்டி எடுத்தேன். அதில் இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள்தான் உண்மையான நண்பர்கள் என்று சொல்லியிருப்பார் அவர். 2009 பிப்ரவரியில் மகிந்த ராஜபக்சவை எடுத்த மின்னஞ்சல் பேட்டியில் இந்தியா இலங்கை அரசுக்கு போரில் நேரடியாக ஆதரவு தருவதை அவர் குறிப்பிட்டிருந்தார். அதுவரை இந்திய அரசு இலங்கைப் போரில் தனது பங்களிப்பு பற்றி மௌனம் காத்து வந்தது. அதனால் அந்த பேட்டி என்னைப் பொறுத்தவரையில் முக்கியமான பேட்டி.
நவம்பரில் இலங்கைக்கு சென்ற போது கருணாவை பேட்டி எடுக்க சென்ற அனுபவமே முக்கியமான அனுபவம். கருணாவின் ஆட்கள் இரண்டு பேர் வந்து என்னை ஹோட்டலிலிருந்து அவர்களது காரில் அழைத்துச் சென்றார்கள். காரில் ஏறி உட்கார்ந்தவுடன் எனது கைப்பையை சோதித்துவிட்டு கண்ணை கட்டிவிட்டார்கள். பிறகு கார் சுற்றி சுற்றி ஒரு மணி நேரம் கழித்து கருணாவின் இருப்பிடத்தை அடைந்தது. அங்கு மீண்டும் ஒரு முறை பரிசோதனைக்கு பிறகு கைப்பையை வாங்கி வைத்துக்கொண்டு கருணாவை பார்க்க அனுமதித்தார்கள்.
விலாவரியாக பேசினாலும் கருணாவிடம் ஒரு பதற்றம் இருந்ததை உணர முடிந்தது. அது போலவே டக்ளஸ் தேவானந்தாவை நான் சந்திக்க சென்ற நாள் பொது நாள். அதாவது மக்கள் அமைச்சரிடம் வந்து குறைகளை சொல்லும் நாள். அவரது வீட்டுக்கு முன்பு பெரிய வரிசை. கிளிநொச்சியிலிருந்து ஒரு வயதான அம்மா தனது மகன் காணாமல் போய்விட்டார் என்று புலம்ப வந்திருந்தார். இப்படி எங்கெங்கிருந்தோ ஏதோ ஒரு நம்பிக்கையை பற்றியபடி வந்திருந்த அனைவரையும் தனது கொழும்பு அலுவலகத்தில் வைத்து நேரடியாக கூட பார்க்காமல் இன்டர்காமில் பேசி அனுப்பினார் டக்ளஸ். இப்படி சில விஷயங்களை நேரில் பார்க்கும் போது உணர முடிந்தது.
கருணாநிதியை  மூன்று  முறை பேட்டி எடுத்திருக்கிறேன். மிக சுவாரஸ்யமாக கோபப்படாமல் பேசக் கூடியவர். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் பேட்டி எடுத்திருக்கிறேன். ஆனால் மறக்க முடியாத பேட்டி என்றால் தி இந்து (தமிழுக்காக) எடுத்த யோகேந்திர யாதவின் பேட்டியும் பேரறிவாளனின் பேட்டியும். யோகேந்திர யாதவிடம் ஒரு சித்தாந்த தெளிவு இருந்தது. அப்படியொரு தலைவரை பார்ப்பது அபூர்வம். பேரறிவாளன் நிதானமும் பொறுமையும் மிக்கவர். அவரது பதில்களை வாசிக்கும் போது அவர் வெளியே வந்த பிறகு ஒரு சிறந்த எழுத்தாளராக வருவார் என்று தோன்றும்.
வீர்ப்பன் தேடுதல் வேட்டையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட தங்கம்மாள், திருட்டு குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட கணவன் சிறையில் கொல்லப்பட நியாயம் கேட்கப் போய் துன்புறுத்தப்பட்ட மதுரை அங்கம்மா ஆகிய இருவரோடும் விரிவாக பேசியிருக்கிறேன். பல புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறது அந்த உரையாடல்கள்.
இந்த நவீன காலத்திலும் பொதுவாக பெண்கள் பத்திரிகை துறைக்கு வருவது குறைவாக இருக்கிறதே.. ஏன்?
தொலைக்காட்சி துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. பல கல்லூரிகளைச் சேர்ந்த இதழியல் படிக்கும் பெண்களை பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். துறைக்கு வர வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கு அவர்கள் பல தடைகளை தாண்டி வர வேண்டியிருக்கும். அப்படி வந்தாலும் அவர்களுக்கான சுமுகமான சூழல் இருக்குமா என்று தெரியவில்லை. நியுஸ் ரூமிலேயே வைத்து நீங்க எல்லாம் எதுக்கு இது மாதிரி வேலைக்கு வர்றீங்க என்று கேட்கும் எடிட்டர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு முறை மெட்டர்னிடி லீவ் பற்றி குறைப்பட்டு கொண்ட ஆண் நண்பரிடம் நான் சொன்ன பதில்: தினமும் நீங்க தம் அடிக்கிறதுக்கு எடுக்கிற பத்து நிமிடங்கள கணக்கு பண்ணா மெட்டன்ர்னிடி லீவ் அதைவிட குறைவாதான் இருக்கும்..
ஒரு பெண் தன்னை நிரூபித்துக் கொள்ள கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டியிருக்கிறது. அப்படி செலுத்தினாலும் அவளை காணாமல் போக செய்யும் ஒரு வாய்ப்புக்காக பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில்தான் பெண்கள் குறிப்பாக இந்த துறையில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
பெண் என்பதால் நீங்கள் சந்தித்த சவால்கள், அதை வெற்றி கொண்ட விதம் பற்றி..
பெண் என்பதால் ஆரம்ப காலத்தில் நியூஸ் ரூமில்தான் கொஞ்சம் பிரச்னைகளை சந்தித்திருக்கிறேன். ஒரு கட்டத்துக்கு மேல் அதை நேரடியாக எதிர்கொள்வதன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். பெண் என்பதாலேயே கேலி செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் என்னால் ஒரு நாளும் பொறுத்துக் கொள்ள இயலாது. கடுமையாக சண்டை போட்டிருக்கிறேன்.  கூட பணிபுரியும் பெண்களுக்காகவும் சேர்த்து சண்டை போட்டிருக்கிறேன்.
கவிதா முரளிதரன்
கவிதா முரளிதரன்

மற்றபடி பாதிக்கப்பட்ட பெண்களை அணுகி பேசும் போது ஒரு பெண் என்பதால் அவர்கள் கூடுதல் நெருக்கத்துடன் சகஜமாக பேசுவதை உணர்ந்திருக்கிறேன். பேச முடியாது என்று மறுப்பவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்பதையும் சுய விதியாய் வைத்திருக்கிறேன்.
உங்கள் எதிர்கால லட்சியம்..
வெகுஜன ஊடகங்களில் சமரசங்கள் செய்தபடிதான் நாம் விரும்பியதை எழுத முடியும் என்கிற தெளிவு எனக்கு உண்டு. ஆனால் குறைவான சமரசங்களை செய்திருக்கிறேன், ஓரளவு அனுபவம் கிடைத்த பிறகு முடிந்த இடங்களில் சமரசத்துக்கு இடம் கொடுக்காமல் மறுத்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் இந்த சமரசங்கள் மேலும் குறைய வேண்டும் என்பதுதான் விருப்பம்.
வளரும் இதழாளர்களுக்கு உங்களது அறிவுரை, வழிகாட்டல்கள் என்ன..?
வாசிப்பும், சாதாரண மக்களுடனான தொடர்ச்சியான உரையாடலும் ஒரு இதழளாருக்கு ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் புதிதாக வரும் இதழாளர்களாலேயே இதழியியல் போக்கில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். எந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்கிற முடிவை அவர்கள் எடுக்க வேண்டும். பல கல்லூரிகளில் இதழியல் மாணவர்களிடம் பேசும் போது நான் வலியுறுத்துவது அவர்கள் பாலின சமத்துவ மொழியை கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.
அதற்கு தமிழ்நாட்டிலேயே நிறைய வழிகாட்டிகள் இருக்கிறார்கள். அடுத்த 5 வருடங்களில் வரப்போகும் புதிய இதழாளர்கள் இது மாதிரியான ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியுமென்றால் அது ஊடகத்துறையின் மிகப்பெரிய வெற்றியாகவும் மாற்றமாகவும் இருக்கும்.