ulladhai-solkiren

பத்திரிகை டாட் காம் வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் எஸ்.வி.சேகர் பேசுகிறேன் …
என் பெயரைச் சொன்னாலே விவரமான ஆள்னு சொல்றவங்க கொஞ்சம் பேர் இருக்காங்க..… .

வில்லங்கமான ஆளாச்சேனு சொல்றவங்களும் இருக்காங்க. விவரம் – வில்லங்கம்.. ரெண்டு வார்த்தைக்கும் கிட்டதட்ட ஒரே மாதிரித்தான் இருக்கும். ஆனா, இதனால ஏற்படுற விளைவுகள் நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு வேறுபட்டதா இருக்கும்.

பொதுவாவே நான் எல்லா விசயத்தையும் தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்படுவேன்.. அது தப்பு கிடையாது. ஆனா எல்லா விஷயத்திலேயும் நூறு சதவிகிதம் நிபுணனா இருக்கணும்னு நினைக்கிறது தப்பு. அது ரொம்ப கஷ்டம்.

அப்துல்கலாம் மாதிரி கலைஞர் மாதிரி.. சில பேராலதான் அப்படி இருக்க முடியும்.

இன்னைக்கும் புதுசா கட்சிக்காரர் ஒருத்தர் வந்து கலைஞர்கிட்ட திருவாரூர் பக்கத்திலே இருக்கிற இந்த கிராமத்திலேருந்து வர்றேன்னு சொன்னா, உடனே அந்த கிராமத்த பற்றி கலைஞர் பல தகவல்கள் சொல்வாராம்.. அங்கிருக்கும் பெரியவர்கள் பெயரைக் குறிப்பிட்டு விசாரிப்பாராம்.

அதெல்லாம் மிகப்பெரிய திறமை..!

அதே மாதிரிதான் அப்துல்கலாம் அவர்களும். ஒரு முறை அவர் என்கிட்ட, “நாடக மேடையில ஸ்கீரன் இழுக்கிறீங்களே.. அது கீழேருந்து மேலயா,, இல்ல சைடுல இழுப்பீங்களா? மேடையின் நீள, அகலம் எவ்வளவு இருக்கும்” என்று விரிவாக விசாரித்தார்.

அவரு என்ன நாடகம் போடற ஐடியாவுலயா இருந்தாரு…? எல்லோருமே நாடகத்தை மட்டும் பாக்கறப்போ, அந்த மேடை எப்படி இருக்கும்னு யோசிக்கிறவரா கலாம் இருந்தார்.

இப்படி எல்லா விசயத்தையும் தெரிஞ்சிக்கிற ஆர்வம், அறிவு சிலருக்குத்தான் இருக்கும் அதைப்பார்த்து பிரமிக்கலாமே தவிர, நாம அப்படி இல்லையேன்னு வருத்தப்படக்கூடாது.

அது தாழவு மனப்பான்மையை உண்டாக்கும். அதுதான் பல பிரச்சினைக்கு அடிப்படை. ஏன்னா, சுப்பீரியாட்டி காம்ப்ளக்ஸ் இருக்கிறவன்கூட, சர்ச்சைகள்ல சிக்காம போயிடுவான். ஆனா இந்த இன்ஃபீரியாட்டி காம்ப்ளக்ஸ்.. தாழ்வு மனப்பான்மை.. இருக்கறவன்தான். அடுத்தவனை மட்டம் தட்டணும் அப்படிங்கிற எண்ணத்தோடயே திரிவான். பிறரை மறுபடி மறுபடி தூற்றி அசிங்கப்படுத்தற மனோபாவத்துல இருப்பான்.

ஒரு விசயத்தை நாம நல்லா புரிஞ்சுக்கணும். யாருக்கும் யாரும் எதிரிகள் கிடையாது. நான் அப்படியாரையும் நினைக்கிறதில்ல.. எனக்கு ரெண்டுவிதமான நண்பர்கள்தான். அதாவது… நண்பர்கள், முன்னாள் நண்பர்கள்! மத்தபடி எதிரியா யாரையும் நினைக்கிறதில்லை. அதனாலதான் பிறரோட கருத்து வேறுபாடு வருமே தவிர, தனிப்பட்ட ஆத்திரம் யார் மேலயும் எனக்கு வர்றதில்லை.

இது புரியாமத்தான் பல பேரு, எதிரியை ஜெயிக்கணும்னு போராடறாங்க. அது. தன் நிழலோட போராடற மாதிரித்தான். சொல்லப்போனா நமக்கு நாமதான் எதிரியா இருக்க முடியும். நம்மோட ஆத்திரம்.. அதன் மூலமா வெளிப்டற வார்த்தைகள்தான் எதிரிகள்.

கருத்து சொல்றது தவறில்லை. அதை சொல்கிற முறையோடு.. அடுத்தவங்க மனம் புண்படாதபடி ச வார்த்தைகளை பயன்படுத்தணும். தவிர, கருத்தை கருத்தால் எதிர்க்கலாம். அதைவிட்டுட்டு, “நீ எப்படி கருத்து சொல்லப்போச்சு”னு விதண்டாவாதம் செய்யக்கூடாது. இதான் என் பாலிசி. அதுமட்டுமல்ல.. சொல்ற கருத்தை ஆராயணுமே தவி, சொன்னது யார்னு பார்க்க வேண்டியதில்லை.

சமீபத்தில கும்பகோணம் பக்கத்துல ஒரு கோயிலுக்கு போயிருந்தேன். அர்ச்சகர்கிட்டேருந்து வலது கையால திருநீறு வாங்கி, இடது கை விரலால எடுத்து நெற்றியில பூசுவதற்கு முயற்சித்தேன்.. அப்போ “அங்க்கிள்.. அப்படி செய்யக்கூடாது..திருநீறை இடது கைக்கு மாத்தாம வலது கையாலேயே நெத்தியில வச்சுக்குங்க” அப்படின்னு ஒரு குரல். யாரோ ஒரு சிறுமி..பாவாட சட்டை போட்டுகிட்டு எனக்கு அட்வைஸ் பண்ணுது!

அந்த குழந்தை சொன்னது சரிதான்னு ஏத்துகிட்டேன். அதைவிட்டுட்டு, “என் வயசு என்ன.. என் அனுபவம் என்ன…எனக்கு புத்த சொல்றியா”னு கோபப்படல.

அந்த குழந்தைக்கும் எனக்கும் நட்போ, பகையோ கிடையாது. ஏன்.. முன்பின் அறிமுகம்கூட கிடையாது. ஆனா, நல்ல விசயத்தைச் சொல்லது ஏத்துக்கறதுதானே முறை? ஏன்னா வாழ்க்கையில எல்லோருமே தினம் தினம் பாடம் கத்துகிட்டு இருக்கோம். “நான் பெரிய அறிவாளி, அனுபவஸ்தன்.. என் சிந்தனைகளை பத்திரிகையில எழுதறேன்” அப்படின்னு நான் கருத்து சொல்ல வரலை. ஏன்னா.. ஒரு பக்கம் இங்க நான் கருத்து சொல்ற போதே, இன்னொரு பக்கம் எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஒரு குரூப்பே தயாரா இருக்கும்! இதுதான் வாழ்க்கை!

நான் ரொம்ப படிச்சு தத்துவம் எல்லாம் சொல்லப்போறதில்லை… நான் வாழ்க்கையில பார்த்ததை உணர்ந்ததை பத்திரிகை டாட் காம் வாசகர்கள்கிட்ட பகிர்ந்துக்க போறேன்.. அவ்வளவுதான்!

இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்திப்போம்!