1

யிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்திய தொழில் அதிபர் மார்ட்டின் ஷ்க்ரெலியை பெடரல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றச்சாட்டு நிரூபண மானால் இவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

32 வயதான மார்ட்டின், பங்குச் சந்தையில் ஹெட்ஜ் ஃபண்ட் மேலாளராக பதவி வகிக்கிறார். தன்னை மிகச் சிறந்த தொழில் முனைவோராக முன்னிலைப் படுத்திக் கொள்வதில் இவர் மிகுந்த அக்கறை செலுத்துவார்.

தன்னை உலகின் மிகத் தகுதி வாய்ந்த பிரம்மச்சாரி (the world’s most eligible bachelor) என்று ட்விட்டர் பக்கத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் மீது உயிர் காக்கும் மருந்துப் பொருள்களின் விலையை 50 மடங்கு உயர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புரூக்ளின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை ஐம்பது லட்சம் டாலர் பிணைத் தொகையில் ஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மார்ட்டின் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.

சமூக வலைதளத்தில் மார்டின் கைது தொடர்பாக பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் எழுதி வருகிறார்கள். வெளியாகியுள்ளன. “பண வெறி பிடித்த மோசமான வியாபாரி” “ இவரால் முதலாளித்துவ சித்தாந்தத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது” என்றெல்லாம் சிலர் கூறியுள்ளனர்.

மார்டின், தான் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த ரெட்ரோபின் எனும் பார்மா நிறுவனத்தின் நிதியை சூறையாடியதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். 1.10 கோடி டாலர் தொகையை தனது வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனத்திலிருந்து மார்டின் அளித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இவை குறித்து மார்டின் கருத்து ஏதும் கூறாத நிலையில், அவரது செய்தித்தொடர்பாளர், “இக் குற்ற்றச்சாட்டுகளை மார்டின் மறுத்துள்ளார். சிலர் சதி செய்து மார்டினை சிக்க வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

கடந்த செப்டம்பர் மாதம் டூரிங் பார்மசூடிக்கல்ஸ் என்ற நிறு வனத்தை உருவாக்கிய மார்ட்டின் அதில் 5.5 கோடி டாலர் முதலீடு செய்து டாராபிரிம் எனும் மருந்தை விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றார். அதன் பிறகு இந்த மருந்தின் விலையை 13.50 டாலரி லிருந்து 750 டாலராக உயர்த்தினார்.

ஒட்டுண்ணிகளால் மிகவும் அரிதாக ஏற்படும் டாக்ஸோபிளாஸ் மாசிஸ் எனும் நோய்க்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த நோய் பொதுவாக மகப்பேறு பெண்களைத் தாக்கும். மேலும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் கள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளையும் இது தாக்கும்.

கடந்த மாதம் மற்றொரு புற்று நோய் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள காலோ பியோஸ் பார்மசூடிக்கல்ஸ் நிறு வனத்தின் பெருமளவு பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் மார்ட்டின் பொறுப்பேற்றார்.

இவர் கைதான தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்கு விலை பாதிக்கும் மேலாக சரிந்தது. இதனால் நிறுவனம் பங்கு வர்த்தகத்தை நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.

பணம் படுத்தும்பாடு!