drugsinhand
டந்த வாரத்தில் இணையதளங்கலில் வில்லனாக வர்ணிக்கப்பட்டவர் மார்ட்டின் ஸ்க்ரேலி. மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களின் அதிபர். இவர் செய்தது ஒன்றே ஒன்று தான். உயிர்காக்கும் மருந்துகளின் விலையை மிக மிக அதிகமாக உயர்த்தியது தான். இதனால் அவருக்கு எட்டுத் திசைகளிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தன. ஒட்டுமொத்த மருந்து கம்பெனிக்கே தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார் என்று கூக்குரல்கள் எழும்பின.

பொதுவாக மருந்து கம்பெனிகள் புதிய மருந்துகளை கண்டுபிடித்து கொள்ளை லாபம் சம்பாதிக்க ஆசைப்படுவதுண்டு. ஆனால் இவர் பேராசைப்பட்டுவிட்டார். கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மருந்தின் அதீத விலை காரணமாக நோயாளிகள் பலர் அதை வாங்க முடியாமல் உயிரைவிட நேரும் என்றனர் எதிர்ப்பாளர்கள். இதை  சமாளிக்க முடியாமல், மருந்துகளின் விலையைக் குறைப்பதாக அறிவித்தார். ஆனால், இதுவரை எதுவும் நடைபெறவில்லை.

மருந்துகளை கண்டுபிடிக்க பரிசோதனை என்ற பெயரில் பல நிலைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது நாம் அறிந்ததே.. அவற்றை மிருகங்களுக்கு கொடுத்து, அதன் எதிர் விளைவுகளை கண்டறிந்து, பின்னர் மெல்ல மனிதர்களுக்கும் கொடுத்து சோதனை செய்ய வேண்டி இருந்தது. இந்த சோதனைகளுக்கு நான்கு ஆண்டுகள் வரை ஆகும். பல சமயம் தோல்வியும் ஏற்படுவதுண்டு. ஆயிரத்தில் ஒரு சோதனை மட்டுமே வெற்றிபெறும் சூழல் நிலவுவதுண்டு. பாதுகாப்பு, மருந்துகளின் அளவுகள், அதன் வீரியத்தன்மை என பல சோதனைகள் செய்தபிறகே, பத்துக்கு ஒரு முயற்சி மட்டுமே மார்க்கெட்டுக்கு வரும். இதில் தோல்வி அடைந்தால் நிறுவனத்துக்கு இழப்புகள் பல லட்சங்கள், பல கோடிகள் வரைக்கும் இருக்கும்.

இதில் ஒவ்வொரு மணித்துளியும் பணம்.  மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஒவ்வொரு சோதனைக்கும் பணத்தைக் கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது. அதுவே மருந்துகளின் விலையை நிர்ணயிக்கப் போதுமானதாக இருக்க முடியாது. பல சோதனைகளைத் தாண்டியபிறகு, அனுமதிக்கப்பட்ட முதல் மருந்தை தயாரிக்க ஆகும் செலவு பல லட்சம், கோடியாக இருக்கும். ஆனால், இரண்டாவது டோஸ் மருந்தை தயாரிக்க சில ரூபாய்கள் தான் ஆகும்.

எவ்வளவு நோயாளிகளுக்கு இந்த மருந்து தேவையாக இருக்கும்; இதேபோல எத்தனை மருந்துகள் மார்க்கெட்டில் உள்ளன:  இந்த குறிப்பிட்ட மருந்தை உட்கொண்டால் நோயாளியின் உடல்நிலை எவ்வளவு சீக்கிரம் குணமடையும் என பல நிலைகளில் மருந்துகளின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.  குறைந்த விலையுள்ள மருந்துகளையே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பரிந்துரை செய்கிறது.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு நிறுவனம் தான் தயாரிக்கும் பொருள்களுக்கு ஏற்ற கணிசமான விலையை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது. “ஆனால், சமூகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுப்பாடுகள் விதிக்க முனையும் அபாயமும் உள்ளது” என்கிறார் ஹிலாரி கிளிண்டன். இதனையே தனது டுவிட்டரில் பதிவு செய்து, “மருந்து கம்பெனிகள் தொடர்பான விதிமுறைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது”  என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் மருந்து கம்பெனிகள் தங்களின் மருந்து பொருள்களின் விலையை 5 சதவீதம் வரை குறைக்க தானாக முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.