1

கூலித்தொழிலாளி போன்ற தோற்றம் உள்ள அந்த மனிதருக்கு தினமும் இரவு பதினோரு மணிக்கு மேல்தான் அந்த முக்கியமான வேலை. வீட்டிலிருந்து தனது சைக்கிளில் கிளம்புகிறார் அந்த மனிதர்.   தஞ்சை ஆர்ஆர் நகரிலிருந்து யாகப்பா நகர் வரை அவரது இலக்கு.

நூறு மீட்டர் தூரத்துக்கு ஒரு முறை தனது சைக்கிள நிறுத்துகிறார். பையில் தயாராக வைத்திருக்கும் பிஸ்கட்டுகளை எடுக்கிறார்.

அவரது வருகைக்காகவே தாயாராக காத்திருக்கின்றன தெரு நாய்கள். அவரைப் பார்த்ததும் வாலை ஆட்டி தங்கள் அன்பை தெரிவித்தபடி அவரை சுற்றிக்கொள்கின்றன. அவரும், அந்த நாய்களுடன் உரிமையாய் பேசிக்கொண்டே பிஸ்கட்களை தருகிறார்.

பலவருடங்களாக , நாள் தவறாமல் இப்படி செய்து வருகிறார் அந்த மனிதர்.

அவர் பெயர் சுந்தர்ராஜ்.  அவரிடம் பேசினன். ” எனக்கு ஐம்பத்தி நாலு வயசு ஆச்சு. கடலை வியாபாரம் செய்யறேன். தினம்  350 முதல்  400 ரூபாய் வரை வருமானம் வரும். அதில 80 ரூபாயை நாய்களுக்கு பிஸ்கட் வாங்க ஒதுக்கிடுவேன்” என்றவர், “இப்போ எல்லாருமே வெளிநாட்டு நாயைத்தான் வீட்டுல செல்லப்பிராணியா வளர்க்கிறாங்க.  சிக்கன், மட்டன்னு நல்லா கவனிக்கிறாங்க. ஆனஆ நம்ம நாட்டு நாய் எல்லாம் தெருநாயா ஆகிப்போச்சு.  சாப்பாட்டுக்கு இதுங்க என்ன செய்யும்.. அதான்! நாளு முழுசும் வேலை பார்த்தாத்தான் நாலு காசு பார்க்க முடியும். அதான் ராத்திரி இப்படி பிஸ்கட் போடறேன்” என்றார்.

2

மேலும், “காலையில  தொழிலுக்கு கிளம்பும்போது, ஒரு கிலோ அரிசிய வடிச்சு என் மனைவி கொடுப்பாங்க. அதை நான் வியாபாரத்துக்கு போற வழியில தென்படுற நாய்களுக்கு கொடுப்பேன்” என்று சொல்லி நெகிழ வைக்கிறார் சுந்தர்ராஜ்.

மனைவி ,  தனியார் கல்லூரி விடுதியில் பணி புரிபுரியும் மகன், சட்டப்படிப்பு படிக்கும் மகள் என்று சிறிய அழகான குடும்பம்.

“12 வருசம் முந்தி வரைக்கும் எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. சொந்த வீட்டை விக்கிற அளவுக்கு போயிடுச்சு அந்த பழக்கம். அப்புறம் உணர்ந்து குடிப்பழக்கத்தைவிட்டேன். அப்போதிலிருந்து நாய்களுக்கு உணவிடுவதை  செய்துவருகிறேன்” என்றவர், ” குடிப்பழக்கம் என்பது நம்மையும் அழித்து, நம் குடும்பம், நண்பர்களையும் அழிச்சிடுது. ஒரு நாய்கூட நம்மளை மதிக்காது. ஆனால அதை நிறுத்தி மனுசனா வாழ்ந்தா, நாய்கள் மீதும் அன்பு செலுத்தலாம்..  அதுக்கு நான் ஒரு உதாரணம்” – இருளிலும் ஒளிர்கிறது அவரது கம்பீரமான முகம்!

“உயிர்களிடத்தில் அன்பு செய்..” என்பதை தனது செயல் மூலம் நிரூபிக்கும் நாகராஜ் அவர்களை வணங்கி விடைபெற்றோம்.

– தஞ்சை ராஜேஷ்