திருவள்ளுவர்
திருவள்ளுவர்

திருவள்ளுவர் தினம் 
உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய அய்யன் திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் அய்யன் திருவள்ளுவர்.
அணுவைத் துளைத்து அதில் ஏழ்கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று புகழப்படும் திருக்குறள், 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள் வீதம் 1330 குறள்களை கொண்டது.
அறத்துப் பால், பொருட் பால், காமத்துப்பால் என முக்கனி போல்  மூன்றாக பிரித்து முத்தமிழின் சுவை தமிழர்க்கு தந்தவர் திருவள்ளுவர்.  அதே நேரம், குறளில் எங்குமே தமிழ் என்ற வார்த்தை இடம்பெறாதது இந்த நூலை உலகப் பொதுமறையாக கருதுவதற்கு  மேலும் ஒரு தகுதியாகும்.
இந் நூல்,  கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது என்பது  மேலும் சிறப்பு!
சரத்சந்திர சட்டோபாத்யாயா
சரத்சந்திர சட்டோபாத்யாயா

சரத்சந்திர சட்டோபாத்யாயா  நினைவு நாள்
சரத்சந்திர சட்டர்ஜீ  என்றும் அழைக்கப்படும் புகழ் பெற்ற வங்காள எழுத்தாளரின் நினைவு நாள் இன்று..  இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழிஇலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் என்று புகழப்படுகிறார், சட்டர்ஜி.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர்,  எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் விளங்கினார்.  மகாத்மா காந்தி மீது விமர்சனங்கள் கொண்டிருந்தாலும் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
’தேவதாஸ்’ எனும் கதையை தனது பதினேழு வயதில் எழுதினார். 2013 ஆம் ஆண்டு வரையிலும்கூட இக்கதை பல மொழிகளிலும் மீண்டும் மீண்டும் திரைவடிவம் பெற்றுள்ளது.
 
கிருஸ்ணகுமார்
கிருஸ்ணகுமார்

கிட்டு நினைவுதினம்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய சதாசிவம் கிருஸ்ணகுமார்  என்கிற கிட்டு,வின் நினைவுதினம் இன்று.
இவர் தனது பதினெட்டாவது வயதில் 1979 ஆம் வருடம்   விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். இலங்கை ராணுவத்துக்கு எதிரான  பல்வேறு தாக்குதல்களில் பங்குபெற்றார்.
யாழ். மாவட்டத் தளபதியாக நியமிக்கப்பட்டவுடன்,  யாழ். காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி, அங்கிருந்த  ஏராளமான  ஆயுதங்களை இவர் கைப்பற்றியது பெரிய அளவில் பேசப்பட்டது.  1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலின் போது  தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா வந்தார்.  1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார்.
பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன்  சர்வதேச கடற்பரப்பில்  எம்.வி அகத் என்ற கப்பலில் இலங்கை திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டார். அப்போது கப்பலை வெடிக்க வைத்து கிட்டு உட்பட  பத்து பேரும் இறந்தனர்.