q

 

டந்த 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் ஒரு கருப்பு நாளாக பதியப்பட்டு விட்டது

.132 பேரை பலி கொண்ட இத்தாக்குதலில் 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 90 பேர் அபாய கட்டத்தில் இருக்கின்றனர். தாக்குதல் நடந்த ஆறிடங்களில் ப்ளேஸ் த ரிபப்ளிக் எனுமிடத்தில் மட்டும் இரண்டு இடங்களில் தாக்குதல் நடந்திருக்கிறது. லெ காரில்லோன் மற்றும் லெ பெத்தி கம்போஜ் ஆகிய இரண்டு உணவகங்களில் தீவிரவாதியொருவன் நடத்திய கடும் துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இதில் லெ பெத்தி கம்போஜ் எனும் கம்போடிய உணவகத்தை தீவிரவாதிகள் தாக்கியபோது உள்ளே 6 தமிழர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து உயிர் தப்பியவர்களில் ஒருவரான கலைசெல்வன் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத தமிழர் ஒருவரும் கூறியதாவது. (தங்களை வெளிப்படையாக அடையாளப்டுத்திக்கொள்ள பல்வேறு சங்கடங்கள் அவர்களுக்கு உண்டு.)

‘ நாங்கள் வழக்கம் போல உணவகத்தின் குசினியில்
( கிச்சன் ) பணி செய்துக்கொண்டிருந்தோம். சரியாக இரவு நேரம் 9:30 மணியளவில் திடீரென்று படபடவென வெடிப்பது போன்று கடும் சத்தம் கேட்டது. முதலில் அருகில் யாரோ பட்டாசு வெடிக்கின்றனர் என்று நினைத்துக்கொண்டு கவனிக்காதிருந்த நாங்கள், கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டதும் சந்தேகப்பட்டு, நான் மட்டும் எங்கள் அறையிலிருந்து வெளியே சென்ற பிறகுதான் அங்கு துப்பாக்கி சூடு நடந்துக்கொண்டிருப்பதே தெரியவந்தது. சில குண்டுகள் நாங்களிருக்கும் திசை நோக்கி வந்ததும் சுதாரித்துக்கொண்டு எங்கள் ஊரில் (இலங்கையில்) போரில் பெற்ற அனுபவத்தில் அனைவரும் தரையில் படுத்து மயிரிழையில் தப்பித்தோம். போலீஸ் வந்த பிறகு வெளியே வந்து பார்த்தபோது ஏராளமானோர் சல்லடையாக துளைக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர். ‘ என்றார்.

ஜே ரீ பார்ன்
ஜே ரீ பார்ன்

தாக்குதல் நடந்த கம்போஜ் உணவகத்தின் கிளை அருகிலியே அமைந்திருக்கிறது. அதில் பணிபுரியும் தமிழரொருவர் தாக்குதல் குறித்து கூறியதாவது ‘ தாக்குதல் நடந்தபோது சத்தம் கேட்டு வெளியே வர முற்பட்ட எங்களை நிர்வாக ஊழியரொருவர் தடுத்து அந்த உணவகத்தில் ஏதோ தகராறு நடப்பதாக கூறி முன்னேற்பாடாக வாசல் கதவை பூட்டி எங்களை வெளியே அனுப்ப மறுத்தார். நாங்கள் ஏதோ பிரச்சனை என்று நினைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தோம். பிறகு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தோம். முதலில் புரளி பரப்ப செய்யப்பட்ட அழைப்பென்று நினைத்த அவர்கள், பிறகு நிறைய அழைப்புகள் வந்ததும் விரைந்து வந்தனர். ஏனெனில், இந்த இடத்தில் இப்படியொரு சம்பவம் நடக்குமென்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். நாங்களும் முதலில் ஏதோ கோஷ்டி மோதலில் துப்பாக்கி சண்டை நடக்கிறதென்றுதான் நினைத்தோம். வெளியே வந்த பிறகே பலர் கொல்லப்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை என்பது தெரிய வந்தது. உணவகம் தாக்குதலில் சேதமடைந்துவிட்ட்து ‘ என்றார்.

இது போன்று பட்டகலான் தாக்குதலில் பலியான ஒருவரின் தாய் ‘ லெ படகலானில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு செல்ல என் மகனுக்கு ஆசையாக வாங்கி பரிசாக கொடுத்த டிக்கெட்டே அவன் உயிருக்கு எமனாக போய்விட்டது ‘ என்று ஊடகத்தில் தெரிவித்திருந்தது மனதை பிழிவதாக இருந்தது.

பாரீஸில் இருந்து ஜே ரீ பார்ன்