saiarul

1910ம் ஆண்டுகளின் துவக்க காலம்…

எல்லாம் வல்ல ஞானகுருவான பாபாவின் மூன்று சீரடர்கள் ஒன்றுகூடி பேசினார்கள்.

“முதன் முதலில் பாபா சீரடிக்கு வந்ததற்கும், புனிதமான வேப்ப மரத்தடியில் அமர்ந்ததற்கும் ஒரு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்” என்பதுதான் அவர்களது பேச்சின் நோக்கம்.

நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, “பாபாவின் பாதுகைகளை ஒரு கல்லில் வடிவமைத்து வேப்ப மரத்தடியில் வைக்கலாம்” என்று தீர்மானித்தனர்.

பாபாவின் பக்தரான “கோத்தாரே” என்பவர் பாதுகைகளை வடிவமைப்பு செய்தார். “உபாசனி” என்ற பக்தர், தாமரைகள், மலர்கள் சங்கு முதலியவைகளை அதில் வரைந்தார். “வேப்பமரத்தின் தனிச்சிறப்பையும் பாபாவின் யோக சக்திகளையும் விளக்கும் ஒரு ஸ்லோகத்தைப் பொறித்து வைக்கலாம்” என்றும் கூறினார்.

உபாசனி அளித்த அறிவுரைகளின்படி, மும்பையில் பாதுகைகளைத் தயார் செய்தார் கோத்தாரே. அவற்றை, தனது உதவியாளர் மூலம் ஷீரடிக்கு அனுப்பி வைத்தார். . ஜி.கே. தீட்சித் என்னும் பக்தர் அவற்றைக் கண்டோபா கோவிலில் இருந்து தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாகத் துவாரகமாயிக்கு வந்தார்.

பாபா அந்த பாதுகைகளைத் தொட்டு “இவை இறைவனுடைய திருவடிகள். வேப்பமரத்தடியில் குரு பூர்ணிமா தினத்தன்று இவற்றைப் பிரதிஷ்டை செய்யுங்கள்” என்று அருள் வார்த்தை கூறினார். அதன்படி பாதுகைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

அந்நிகழ்ச்சிக்கு பாபாவின் பக்தர்கள் திரண்டு வந்து, பாதுகைகளை வணங்கினர். அன்று முதல் வேப்ப மரத்தடி பாதுகைக்கு மாலை நேரத்தில் விளக்கு ஏற்றவும், முறைப்படி பூஜைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சி 1912-ஆம் ஆண்டு நடைபெற்றது.

குரு என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு இருளை விலக்குபவர் என்று அர்த்தமாகும். குரு, நம்மிடமுள்ள அறியாமையாகிய இருளை அகற்றி ஞான மார்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

அப்படிப்பட்ட குருவை வணங்கி கொண்டாடும் நாள்தான் குரு பூர்ணிமா. இது ஆடி மாதம் வரும் முழு நிலவு நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

ஆகவேதான் அத்தகைய புனிதமான நாளில் பாதுகைகளை பிரதிஷ்டை செய்யச் சொன்னார் பாபா.

நமது ஞானகுருவான பாபாவை கொண்டாடும் விதத்தில் ஸ்ரீ சாயி சத்சரிதம் பத்திரிகை டாட் மூலமாக பக்தர்களுக்கு கொண்டு செல்ல நினைத்தோம். அதன்படி பாபாவைப் போற்றும்படியாக ஸ்ரீ சாயி சத்சரித்திரம் குருபூர்ணிமாவான இன்று பதிவேற்றியிருக்கிறோம்.

இதற்கு அனுமதி அளித்த மதிப்புக்குரிய ஷீரடி சாய் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் மதிப்புக்குரிய திரு. எஸ்.வி. ரமணி அவர்களுக்கு நமது பத்திரிகை டாட் காம் இதழ் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்றோம்.