சென்னை:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள   மேல்முறையீடு மனு மீது வரும் 8ந்தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில்  செயல்பட்டு வந்த  ஸ்டெர்லைட் ஆலை காரணமாக அந்த பகுதி மக்கள் பல்வேறு நோய்களை சந்தித்து வந்த நிலையில், அலைக்கு  எதிராக அந்த பகுதியை சேர்ந்த  மக்கள் கொதித்தெழுந்த நிலையில், கடந்த மே மாதம் மே 22ம் தேதி நடைபெற்ற போராட்டத் தின்போது,  காவர்துறையினர் பொதுமக்கள் மீது நடத்திய  துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்தது.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டற்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம்  ஆலையை திறக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்  உத்தரவு, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி  உள்ளது. தூத்துக்குடியில் மீண்டும் போராட்டம் தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக  தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். நேற்றைய கவர்னர் உரையிலும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்த ரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு நேற்று மனுதாக்கல் செய்தது. மனுவை ஆய்வு செய்த உச்சநீதி மன்றம் வழக்கின் விசாரணை வரும் 8ந்தேதி நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு விசாரணை நடத்த உள்ளது. இந்த வழக்கில்  வேதாந்தா நிறுவனம் சார்பில் சீனியர் வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.