1
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட,  தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக, கட்சியினரே கலகம் செய்வது தொடர்ந்துகொண்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனுக்கு இந்த முறை சீட் தரப்படவில்லை. இதையடுத்து ஆத்திரமான அவர், தனது ஆதரவாளர்களை அழைத்து, தலைமையின் முடிவுககு எதிராக  நியாயம் கேட்டு கூட்டம் நடத்தினார்.
திமுக கோட்டையாக கருதப்படும் நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளில், உதகை தொகுதி கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூடலூர், தனித் தொகுதி ஆகும். ஆகவே,  குன்னூர் தொகுதியில் அங்கு கணிசமாக வசிக்கும் படுகர் இன வேட்பாளர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.  தற்போதைய எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கா.ராமச்சந்திரன் படுகர் இனத்தவர் என்பதால் அவரே மீண்டும் களம் இறக்கப்படுவார் என்று   அவரது ஆதரவாளர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் குன்னூர் தொகுதி வேட்பாளராக நீலகிரி மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் அறி விக்கப்பட்டார். இதற்கு, கா.ராமச்சந்திரன் ஆதரவாளர்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். தலைமையின் முடிவை விமர்சிக்கும் வாசகங்களுடன் , ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டன.
மேலும், தலைமையிடம் நியாயம் கேட்கும் கூட்டத்தையும், கோத்தகிரியில் க.ராமச்சந்திரன் நடத்தினார். முன்னாள் எம்எல்ஏ டி.குண்டன் பேசும்போது, ‘மற்ற இனத்தவர், , தமிழகத்தில் எங்கு வேண்டு மானாலும் போட்டியிடலாம். ஆனால், படுகரின மக்கள் நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே போட்டியிட முடியும். ஆகவே  வேட்பாளர் குறித்து தலைமை மீண்டும் பரிசீலனை செய்து, க.ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
ஆலங்குடி
ஆலங்குடி தொகுதிக்கு திமுக வேட்பாளராக டாக்டர் ஜி.சதீஸ் அறிவிக்கப்பட்டார்.  அப்போதிலிருந்தே வேட்பாளரை மாற்ற வேண்டுமென  அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மெய்யநாதன் தரப்பினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.  கொத்தமங்கலத்தில் கருப்பு கொடிகளுடன் திரண்டுவந்த திமுகவினர் நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு,  தலைமையின் முடிவை கடுமையாக விமர்சித்து கோசம் எழுப்பினர்.
மண்ணச்சநல்லூர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளராக கணேசன் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செல்வராஜின் ஆதரவாளர்கள்  தொடர்ந்து முசிறி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஐநூறுக்கும் மேற்பட்ட தி.மு.கவினர்  வேட்பாளரை மாற்றக்கோரி  திருச்சி- நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு தொண்டர் தீக்குளிக்க முயன்றதால்  பரபரப்பு ஏற்பட்டது.