iiii

சென்னை:

லித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஷ்ணுப்பிரியாவுடன் அவர் பேசிய பேச்சையும் வெளியிட்டுள்ளார்.

ஓமலூரை  சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ், கவுண்டர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததாகவும், அதனால் கோகுல்ராஜை, யுவராஜ் தலைமையிலான குழு கொலை செய்ததாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ், தலைமறைவாக இருக்கிறார். அவ்வப்போது வாட்ஸ்அப்பில் தனது பேச்சை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், “விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டதற்கு, உயர் போலீஸ் அதிகாரிகளின் டார்ச்சர்தான் காரணம். அந்த அதிகாரிகள் பற்றி விஷ்ணுப்ரியாவே என்னிடம் பேசிய ஆடியவோ வெளியிடுவேன்” என்று நேற்று வாட்ஸ்அப்பில் தனது பேச்சை வெளியிட்டார்.

அது போல இன்று ஒரு ஒலிநாடாவை வாட்ஸ்அப்பில் வெளியிட்டார். அதில், தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியாவுடன் பேசிய அலைபேசி உரையாடலை வெளியிட்டிருக்கிறார்.

விஷ்ணுப்ரியாவுடன் யுவர்ஜ் பேசிய ஆடியோ கிட்டதட்ட 50 நிமிடங்கள் ஓடுகின்றது. இதில் விஷ்ணுப்ரியாவுடன் தான் பேசிய அலைபேசி உரையாடலையும் இணைத்துள்ளார்.

யுவராஜ் பேசியதில் இருந்து… …

நாமக்கல் எஸ்பி செந்தில்குமார், கூடுதல் டிஎஸ்பி சந்திரமோகன், மேற்கு மண்டல ஐஜி சங்கர் ஆகியோரே குற்றவாளிகள்..

உயர் அதிகாரிகள் பல்வேறு விதங்களில் விஷ்ணுப்பிரியாவுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். கைதிகள் முன்னிலையில் விஷ்ணுப்பிரியாவை உயர் அதிகாரிகள் அவமானப்படுத்தினார்கள்.

இவர்களுக்கு மேற்கு மண்டல ஐஜி சங்கர் பாதுகாப்பாக இருக்கிறார்.

அவரை இடை நீக்கம் செய்ய வேண்டும்.

விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான தகவல்களை, உண்மையை அதிகாரிகள் வெளியிடாவிட்டால் நான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வேன்.

கோகுல்ராஜ் வழக்கில் எனக்கு மரண தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை. நான் ஏற்கத் தயார்.

கோகுல்ராஜ் வழக்கில் இப்போது அரசியல் புகுந்து விட்டது. அதில் நியாயம் கிடைக்காது.

– இவ்வாறு தனது வாட்ஸ் அப் பேச்சில் யுவராஜ் தெரிவித்துள்ளார்

யுவராஜை காப்பாற்றும் விதத்தில்தான் விஷ்ணுப்ரியாவுக்கு உயர் அதிகாரிகள் டார்ச்சர் கொடுத்தார்கள் என்று கூறப்பட்ட நிலையில், யுவராஜாவே உயர் அதிகாரிகளை குற்றம் சாட்டியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.